நாகை மாவட்டம் வேதாரண்யம் வட்டம் கத்தரிப்புலம், செட்டிபுலம், புஷ்பவனம், நாலுவேதபதி, செம் போடை, தேத்தாகுடி உள்ளிட்ட பகுதிகளில் 5 ஆயிரம் ஏக்கரில் மா சாகுபடி நடைபெற்று வருகி றது. சீசன் சமயங்களில் மொத்த வியாபாரிகள் மூலமாக தமிழகத் தின் பல்வேறு மாவட்டங்களுக்கு மாம்பழங்கள் விற்பனைக்கு அனுப்பப்படும்.
இப்பகுதியில் ருமேனியா, செந்தூரா, பங்கனப்பள்ளி, ஒட்டு நீலம் ஆகிய ரகங்கள் அதிக அளவில் விளைகின்றன. வழக்கம்போல, இந்த ஆண்டும் அனைத்து ரக மாம்பழங்களும் அதிக அளவு விளைச்சலை தந்துள்ளன.ஆனால், கடந்த ஒரு மாதமாக கரோனா ஊரடங்கு காரணமாக, மாம்பழங்களை கொள்முதல் செய்ய வெளியூர் வியாபாரிகள் வராததால், அவை அறுவடை செய்யப்படாமல் மரத்திலேயே பழுத்து வீணாகும் நிலை ஏற்பட்டுள்ளது.
ஒரு சில வியாபாரிகள் மட்டும், நாட்டு ரக மாங்காய் கிலோ ரூ.6, ஒட்டு மாங்காய் ரூ.10, பங்கனப்பள்ளி, ருமேனியா, செந்தூரா உள்ளிட்ட மாம்பழ ரகங்களை ரூ.15-க்கு கொள்முதல் செய்கின்றனர்.
தற்போது வேதாரண்யம் பகுதியில் 500 டன் ருமேனியா மாம்பழம் விற்பனையாகாமல் தேக்கம் ஏற்பட்டுள்ளது. இதனால் மா விவசாயிகள் கடும் வேதனை அடைந்துள்ளனர். எனவே, மாம்பழங்களை விற்பனை செய்ய விவசாயிகளுக்கு வேளாண்மை துறை தகுந்த ஆலோசனை வழங்க வேண்டும் என்றும், அரசே கொள்முதல் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.