மந்தாரக்குப்பம் அருகே உள்ள ஆதண்டார்கொல்லையை சேர்ந்தவர் மாடசாமி மகன் சண்முகவேல்(வயது 32). இவருக்கு திருணமாகி மனைவி மற்றும் 3 பெண் குழந்தைகள் உள்ளனர்.
இவரது மைத்துனர், அதே பகுதியை சேர்ந்த சின்னத்துரை மகன் தமிழரசன்(28). இந்த நிலையில் நேற்று மாலை சண்முகவேல், தமிழரசன் ஆகியோர் ஒரு மோட்டார் சைக்கிளில் மந்தாரக்குப்பம் நோக்கி வந்து கொண்டிருந்தனர்.
அப்போது, கடலூர்-விருத்தாசலம் சாலையில் என்.எல்.சி. 2-வது சுரங்கத்துக்கு அருகே வந்த போது, அவர்களுக்கு பின்னால் என்.எல்.சி. சுரங்கத்தில் நிலக்கரி ஏற்றுவதற்காக லாரி ஒன்று வந்து கொண்டிருந்தது. அப்போது திடீரென அந்த லாரி மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் லாரியின் சக்கரத்தில் சிக்கிய சண்முகவேல் சம்பவ இடத்திலேயே உடல்நசுங்கி உயிரிழந்தார். தமிழரசன் லேசான காயங்களுடன் உயிர்தப்பினார்.
இதற்கிடையே விபத்து பற்றி அறிந்த அவரது குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் அங்கு வந்தனர். அதற்குள் மந்தாரக்குப்பம் போலீசார் இறந்தவரின் உடலை அமரர் ஊர்தியில் ஏற்றும் பணியில் ஈடுபட்டனர். இதை கண்டு அதிர்ச்சியடைந்த அவர்கள், இறந்தவரின் உடலை எடுக்க விடாமல் தடுத்து நிறுத்தி அந்த பகுதியில் சாலை மறியலில் ஈடுபட்டனர். போலீசார் அவர்களிடம் பேச்சவார்த்தை நடத்தினர்.
அதில், இறந்தவரின் குடும்பத்திற்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும், விபத்தை ஏற்படுத்திய லாரி டிரைவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்தனர். இதுகுறித்து நடவடிக்கை எடுப்பதாக போலீசார் உறுதியளித்தனர். இதையடுத்து அவர்கள் மறியலை கைவிட்டனர்.
பின்னர் சண்முகவேலின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக விருத்தாசலம் அரசு மருத்துவமனைக்கு போலீசார் அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.