0 0
Read Time:3 Minute, 18 Second

மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் அருகே தைக்கால் கிராமத்தில் பல தலைமுறைகளாக பாரம்பரிய பிரம்பு பொருட்கள் உற்பத்தி மற்றும் விற்பனை நடைபெற்று வருகிறது. முதலில் சாதாரண குடிசை தொழிலாக பிரம்பு பொருட்கள் தயாரிப்பு தொழில் தொடங்கியது. தற்போது கொள்ளிடத்தில் இருந்து புத்தூர் வரை 2 கி.மீ. தூரம் சாலையின் இருபுறமும் 200-க்கும் மேற்பட்ட உற்பத்தி கூடங்களும், விற்பனையகங்களும் இயங்கி வருகின்றன. இங்கு தயாரிக்கப்படும் பிரம்பு பொருட்களுக்கு புவிசார் குறியீடு உண்டு.

இங்கிருந்து வெளிநாடுகளுக்கும் பிரம்பு பொருட்கள் ஏற்றுமதி செய்யப்படுகிறது. பிரம்பால் ஆன நாற்காலி, ஊஞ்சல், சோபாசெட், அலமாரி, குழந்தைகள் தொட்டில் மற்றும் மிகுந்த கலை நயம் மிக்க கைவினை பொருட்களும் உற்பத்தி செய்யப்படுகின்றன. இந்த பிரம்பு பொருட்கள் உற்பத்தி தொழிலை நம்பி தைக்கால், சாமியம், ஆணைக்காரன்சத்திரம், கோபாலசமுத்திரம், புத்தூர், பெரம்பூர் உள்பட 20-க்கும் மேற்பட்ட கிராமங்களை சேர்ந்த தொழிலாளர்கள் வேலை வாய்ப்பு பெற்று வந்தனர்.

தற்போதைய கொரோனா ஊரடங்கால் தைக்கால் கிராமத்தில் பிரம்பு பொருட்கள் உற்பத்தி முற்றிலும் முடங்கி உள்ளது. இதனால் இந்த தொழிலை மட்டுமே நம்பி உள்ள 5 ஆயிரம் தொழிலாளர்கள் வேலை வாய்ப்பு இல்லாமல் வாழ்வாதாரத்தை இழந்து தவித்து வருகிறார்கள். கடந்த ஆண்டும் உற்பத்தி செய்த பொருட்களை முழுமையாக விற்பனை செய்ய முடியாத நிலையில் தற்போதைய ஊரடங்கு அனைவரையும் கவலையில் ஆழ்த்தியுள்ளது. சுற்றுலா மற்றும் ஆன்மிக பயணிகளே அதிகம் பிரம்பு பொருட்களை வாங்கி செல்வது வழக்கம். கடந்த கொரோனா அலையின் தாக்கம் குறைந்து சுற்றுலா, ஆன்மிக தலங்களும் முழு பயன்பாட்டுக்கு வராத நிலையில் இரண்டாம் அலையால் இவர்களின் வாழ்கை கேள்விக்குறியாகி உள்ளது. கிராமத்தில் இருபுறமும் பிரம்பு பொருட்களால் போர்த்தியது போல் காட்சியளித்த தைக்கால் கிராமம் தற்போதைய ஊரடங்கால் கடைகள் மூடப்பட்டு வெறிச்சோடி கிடக்கிறது. எனவே தங்களுக்கு அரசு கூடுதல் நிவாரணம் வழங்க வேண்டும் என பிரம்பு தொழிலாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %