மக்கள் பிரதிநிதிகள் தடுப்பூசி போட்டுக்கொண்டதை அரசு உறுதிசெய்ய வேண்டும் -இந்து மக்கள் கட்சி கோரிக்கை!
மக்கள் பிரதிநிதிகள் தடுப்பூசி போட்டுக்கொண்டதை அரசு உறுதிசெய்ய வேண்டும் என இந்து மக்கள் கட்சி கோரிக்கை வைத்துள்ளது. இதுகுறித்து அக்கட்சியின் மாநில செயலாளர் கொள்ளிடம் ஜெ.சுவாமிநாதன் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது:
“கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து நம்மை பாதுகாத்துக்கொள்ள மத்திய, மாநில அரசுகள் தடுப்பூசி போடவேண்டியதன் அவசியத்தை வலியறுத்தி வருகின்றன. அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் தடுப்பூசி போடப்படுவதோடு சிறப்பு முகாம்கள் அமைத்தும் தடுப்பூசி போடப்படுகிறது. மாற்றுதிறனாளிகளுக்கு அவர்களது இருப்பிடத்திற்கே சென்று சுகாதார பணியாளர்கள் தடுப்பூசி போட்டு வருகின்றனர். இருந்தபோதிலும் இன்னும் போதிய அளவு விழிப்புணர்வு ஏற்படவில்லை.பெரும்பாலான
அரசு அதிகாரிகள் மற்றும் ஊழியர்களே தடுப்பூசி போட்டுக்கொள்ளாத நிலையே உள்ளது. மேலும் மக்கள் பிரதிநிதிகளில் பலர் இன்னும் தடுப்பூசி போட்டுக்கொள்ளவில்லை.
ஊராட்சி மன்ற தலைவர் மற்றும் உறுப்பினர்கள், ஒன்றிய பெருந்தலைவர் மற்றும் ஒன்றிய குழு உறுப்பினர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்டோர் தடுப்பூசி போட்டுக்கொண்டதை அரசு உறுதிசெய்ய வேண்டும்.தடுப்பூசி போடாத மக்கள் பிரதிநிதிகள் உடனடியாக தடுப்பூசி போட்டுக்கொள்ள அரசு அறிவுறுத்த வேண்டும்.
அது போல, தடுப்பூசி போட்டுக்கொண்டவர்கள் அதனை சமூக வலைதளங்கள் மற்றும் பத்திரிகைகளில் வெளியிட்டு மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்”. என தெரிவித்துள்ளார்.