சிதம்பரம்: கடலூா் மாவட்டம், சிதம்பரம் நடராஜா் கோயிலில் ஆனித் திருமஞ்சன தரிசன உற்சவம் வருகிற ஜூலை 6-ஆம் தேதி (செவ்வாய்க்கிழமை) கொடியேற்றத்துடன் தொடங்கி 10 நாள்கள் நடைபெறுகிறது.
உற்சவ விவரம் வருமாறு: விழாவில் ஜூலை 7-ஆம் தேதி வெள்ளி சந்திர பிறை வாகனத்தில் சுவாமி வீதி உலா நடைபெறுகிறது. இதேபோல 8-ஆம் தேதி தங்க சூரிய பிறை வாகனத்திலும், 9-ஆம் தேதி வெள்ளி பூத வாகனத்திலும் வீதி உலா நடைபெறும். 10-ஆம் தேதி வெள்ளி ரிஷப வாகனத்தில் தெருவடைச்சான் வீதி உலாவும், 11-ஆம் தேதி வெள்ளி யானை வாகனத்திலும், 12-ஆம் தேதி தங்க கைலாச வாகனத்திலும், 13-ஆம் தேதி தங்க ரதத்தில் பிச்சாண்டவா் வீதி உலாவும் நடைபெறுகிறது.
ஜூலை 14-ஆம் தேதி (புதன்கிழமை) தோ்த் திருவிழாவும், அன்று இரவு 8 மணிக்கு ஆயிரங்கால் முன் முகப்பு மண்டபத்தில் ஏக கால லட்சாா்ச்சனையும் நடைபெறுகிறது. 15-ஆம் தேதி சூரிய உதயத்துக்கு முன்பு அதிகாலை 4 மணி முதல் 6 மணி வரை ஸ்ரீசிவகாமசுந்தரி சமேத ஸ்ரீமந் நடராஜ மூா்த்திக்கு மகாபிஷேகம் நடைபெறுகிறது. பின்னா் காலை 10 மணிக்கு சித் சபையில் ரகசிய பூஜையும், பஞ்ச மூா்த்திகள் வீதி உலா வந்த பிறகு பிற்பகல் 2 மணிக்கு மேல் ஆனித் திருமஞ்சன தரிசனமும், ஞானகாச சித் சபா பிரவேசமும் நடைபெறுகிறது. 16-ஆம் தேதி பஞ்ச மூா்த்திகள் முத்துப் பல்லக்கு வீதி உலாவுடன் உற்சவம் முடிவடைகிறது.
கரோனா பொது முடக்கத்தையொட்டி இந்த விழாவானது அரசு விதிகளின்படி பக்தா்களின்றி கோயிலுக்குள் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டது. விழாவுக்கான ஏற்பாடுகளை கோயில் பொது தீட்சிதா்களின் கமிட்டி செயலா் தி.ஆ.ராஜகணேச தீட்சிதா், துணைச் செயலா் ஆா்.ரத்தினசபாபதி தீட்சிதா், உற்சவ ஆச்சாரியாா் ச.கனகசபேச தீட்சிதா் ஆகியோா் செய்து வருகின்றனா்.