கொரோனா வைரஸ் பரவல் காரணமாக தமிழகத்தில் இன்னும் பள்ளிக்கூடங்கள் திறக்கப்படவில்லை. ஏற்கனவே அரசு பொதுத்தேர்வுகள் ரத்து செய்யப்பட்டு, அனைத்து மாணவர்களும் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. இருப்பினும் நடப்பு கல்வி ஆண்டுக்கான பணிகளை தொடங்கி நடத்த கல்வித்துறை அதிகாரிகள் உத்தரவிட்டனர். அதன்படி கடலூர் மாவட்டத்தில் உள்ள 1,716 அரசு, அரசு உதவி பெறும், தொடக்க, நடுநிலை, உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் அலுவலக பணிகள் துரிதமாக நடைபெற்று வருகிறது. மேலும் கல்வி தொலைக்காட்சி மூலம் பாடங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. தனியார் பள்ளிகளில் ஏற்கனவே ஆன்லைன், வாட்ஸ்-அப் மூலமாக வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது.
இதற்கிடையில் அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கு பாடப்புத்தகங்கள் வாகனங்கள் மூலம் அனுப்பி வைக்கப்பட்டு இருந்தது. இந்நிலையில் 1-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை பாடப்புத்தகங்களை வினியோகம் செய்ய மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ரோஸ்நிர்மலா உத்தரவிட்டார்.
அதன்படி நேற்று முதல் 1 முதல் 12-ம் வகுப்பு வரையுள்ள மாணவர்களுக்கு பாடப் புத்தகங்கள் வினியோகம் செய்யப்பட்டன. கடலூர் திருப்பாதிரிப்புலியூர் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி, வேணுகோபாலபுரம் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி, கடலூர் நகராட்சி மேல்நிலைப்பள்ளி, திருக்கண்டேஸ்வரம் நகராட்சி மேல்நிலைப்பள்ளி உள்பட அரசு உதவி பெறும், தொடக்க, நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில் உள்ள 3 லட்சத்து 19 ஆயிரத்து 474 மாணவ- மாணவிகளுக்கு பாடப்புத்தகங்கள் வினியோகம் செய்யும் பணி முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. அனைத்து பள்ளிகளிலும் அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை கடைபிடித்து பாடப் புத்தகங்கள் வினியோகம் செய்யப்பட்டன. இந்த பணிகளை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ரோஸ் நிர்மலா பார்வையிட்டு ஆய்வு செய்தார்.