சிதம்பரம் அருகே கொத்தங்குடி ஊராட்சி அலுவலகம் முன்பு பிச்சாவரம் கூட்டுறவு விற்பனை சங்கங்கத்திற்கு உட்பட்ட ரேசன் கடை உள்ளது. இந்த கடையில் 900-க்கும் மேற்பட்ட குடும்ப அட்டைகளுக்கு பொருட்கள் வழங்கப்படுகிறது. வாரத்தில் இரு நாட்கள் மட்டும் திறக்கப்பட்டு பொருட்கள் வழங்குவதால் பொதுமக்கள் ரேஷன் பொருட்களை வாங்குவதில் சிரமம் இருந்து வருகிறது. இந்த நிலையில் தற்போது கடந்த சில நாட்களாக பொருட்கள் வழங்குவதில் குளறுபடிகள் உள்ளதாக பொதுமக்கள் மத்தியில் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இந்நிலையில் வியாழக்கிழமை 150-க்கும் மேற்பட்ட பெண்கள் மற்றும் ஆண்கள் ரேசன் கடைக்கு வந்தனர். அப்போது கடையின் ஊழியரிடம், கரோனா நிதி, நிவாரணபொருட்கள் மற்றும் ரேஷன் பொருட்களை வழங்க வேண்டும் என்று பொதுமக்கள் கேட்டனர். அதற்கு ஊழியர் நிவாரண பொருட்கள் வரவில்லையென்றும் தற்போது இருக்கும் அரிசி உள்ளிட்ட பொருட்களை மட்டும் வாங்கிகொள்ளுங்கள் என கூறியுள்ளார். இதற்கு கடை ஊழியருக்கும் பொதுமக்களுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால் அந்த பகுதியில் கூச்சல் ஏற்பட்டது
இதனைதொடர்ந்து ரேஷன் கடை மூடப்பட்டது. பின்னர் அண்ணாமலைநகர் காவல் நிலையத்தில் இருந்து காவலர்களை வரவழைத்து பொதுமக்களை வரிசைபடுத்தி கரோனா நிதி மற்றும் நிலுவையில் இருக்கும் ரேஷன் பொருட்கள் வழங்கப்பட்டது. ரேஷன் கடையில் பொதுமக்கள் கூச்சலிட்டு முற்றுகையில் ஈடுபட்டது பரபரப்பை ஏற்படுத்தியது.
இதுகுறித்து அந்த பகுதியில் உள்ளவர்கள் கூறுகையில், “700 குடும்ப அட்டைகள் இருந்தாலே அந்த கடையை முழு நேர கடையாக செயல்படுத்த வேண்டும். இங்கு 900-த்திற்கு மேற்பட்ட குடும்ப அட்டைகள் உள்ளபோதும் இது பகுதி நேர ரேஷன் கடையாக மட்டுமே உள்ளது. எனவே இதனை அனைத்து வேலைநாட்களிலும் திறந்து பொதுமக்களுக்கு பிரச்சனை இல்லாமல் பொருட்களை வழங்கவேண்டும்” என்கின்றனர்.
பிச்சாவரம் கூட்டுறவு சங்க தலைவர் வேணுகோபால் இது குறித்து கூறுகையில், “தற்போது பிச்சாவரம் கூட்டுறவு சங்கத்திற்கு உட்பட்ட பகுதி ரேஷன் கடைகளில் 6 விற்பனையாளர்கள் பணியிடம் காலியாக உள்ளது. இதனால் மற்ற கடைகளில் உள்ளவர்களை கொண்டு கூடுதல் பணி செய்ய வலியுறுத்தி ரேஷன் கடைகளை செயல்படுத்தபடுகிறது. அதே நேரத்தில் இந்த கடையை முழு நேர கடையாகமாற்ற அரசு தான் நடவடிக்கை எடுக்கவேண்டும். இதனை முழுநேரகடையாக மாற்ற அனைத்து நடவடிக்கைகளும் எடுத்து வரப்படுகிறது” என்கிறார்.