கடலூர் நகராட்சிக்கு சொந்தமான 121 கடைகளுக்கு, வாடகை செலுத்தாமல் வியாபாரிகள் இருந்தனர். இதன் மூலம் நகராட்சிக்கு 3 கோடியே 73 லட்சத்து 99 ஆயிரத்து 195 ரூபாய் வாடகை பாக்கி இருந்தது. இதையடுத்து நகராட்சிக்கு வாடகை செலுத்தாத நபர்களின் கடைகளை சீல் வைக்க ஆணையாளர் ராமமூர்த்தி உத்தரவிட்டார்.
அதன்படி நேற்று வருவாய் ஆய்வாளர் பாஸ்கரன், உதவியாளர்கள் சீனிவாசன், பரத் வீரகுமார், லட்சுமணன் ஆகியோர் பழைய கலெக்டர் அலுவலக சாலையில் உள்ள இனிப்பு கடை, செருப்பு கடை ஆகியவற்றை பூட்டி சீல் வைத்தனர். இதில் இனிப்பு கடை உரிமையாளர் ரூ.54 ஆயிரம் பாக்கியும், செருப்பு கடைக்காரர் ரூ.63 ஆயிரம் வாடகை பாக்கியும் கடந்த சில ஆண்டுகளாக செலுத்தாமல் இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.பாக்கி வைத்துள்ள மற்ற கடை உரிமையாளர்களும் உடனடியாக நகராட்சிக்கு செலுத்த வேண்டிய வரி, வாடகை பாக்கியை செலுத்த வேண்டும். இல்லையெனில் கடைகள் பூட்டி சீல் வைக்கப்படும் என்றும் நகராட்சி அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.