கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து கடலூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் பல்வேறு துறை அலுவலர்களுடனான ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது.
இதற்கு கலெக்டர் பாலசுப்பிரமணியம் தலைமை தாங்கினார். பின்னர் அவர் கூறுகையில், கொரோனா பரவலை கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. கொரோனா தொற்று பரவல் குறைந்து வரும் நிலையில் கட்டுப்பாடுகளில் சில தளர்வுகளை அரசு அறிவித்து வருகிறது.மேலும் தொடர்ந்து மக்கள் அதிகம் கூடும் இடங்களில் சமூக இடைவெளியை கடைபிடிப்பதும், முககவசம் கண்டிப்பாக அணிவதும், அரசு அறிவித்துள்ள வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றுவது ஆகியவை குறித்து அலுவலர்கள் கண்காணித்து அவற்றை கடைபிடிக்காதவர்களுக்கு அபராதம் விதித்து, தொற்று பரவலை கட்டுப்படுத்த நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
கொரோனா தொற்று பரவல் அதிகமாக உள்ள பகுதிகளை கண்டறிந்து காய்ச்சல் முகாம்கள் நடத்த வேண்டும். மேலும், தொற்று உறுதி செய்யப்பட்டவர்களை பரிசோதித்து, தொற்றின் தன்மைக்கேற்ப மருத்துவமனைக்கு அல்லது கொரோனா பராமரிப்பு மையத்திற்கு அனுப்பி சிகிச்சை மேற்கொள்ள வேண்டும்.
தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் வசிக்கும் பகுதிகளில் தினசரி தூய்மை பணிகள் மேற்கொள்ள சுகாதாரத்துறை அலுவலர்கள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
நகராட்சி, பேரூராட்சி, ஊராட்சி பகுதிகளில் யாருக்காவது கொரோனா தொற்று கண்டறியப்பட்டால், அந்த பகுதியை தீவிர கண்காணிப்பில் கொண்டுவந்து கண்காணிக்கவேண்டும். கட்டுப்பாட்டு பகுதியில் காவல்துறையினருடன் இணைந்து தன்னார்வலர்களை நோய் தடுப்பு பணியில் ஈடுபடுத்தவேண்டும்.
அரசு சில தளர்வுகள் அறிவித்துவரும் நிலையில் வியாபார நிறுவனங்களில் சமூக இடைவெளியை கடைபிடிப்பதும், முககவசம் அணிவதையும் தீவிரமாக வரும் நாட்களில் கண்காணிக்க வேண்டும் என்றார்.இதில் போலீஸ் சூப்பிரண்டு சக்திகணேசன், கூடுதல் ஆட்சியர் (வருவாய்) ரஞ்ஜீத் சிங், நோய் கண்காணிப்பு அலுவலர் சாயிராபானு, மருத்துவ பணிகள் இணை இயக்குனர் ரமேஷ்பாபு, சுகாதார பணிகள் துணை இயக்குனர் செந்தில்குமார், கோட்டாட்சியர் அதியமான் கவியரசு மற்றும்வருவாய்த்துறை, சுகாதாரத்துறை, உள்ளாட்சித்துறை, நகராட்சி, பேரூராட்சி அலுவலர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் பலர் கலந்துகொண்டனர்.
Read Time:3 Minute, 32 Second