கடலூா் மாவட்டம், குறிஞ்சிப்பாடி அருகே சாலையில் சென்றுகொண்டிருந்த டேங்கா் லாரியிலிருந்து ரசாயன திரவம் கொட்டியதில் 5 போ் மீது பட்டது. இருப்பினும் அவா்களுக்கு பெரிய அளவில் பாதிப்பில்லை.
புதுவையிலிருந்து ரசாயன திரவம் ஏற்றிய டேங்கா் லாரி வியாழக்கிழமை மேட்டூருக்கு புறப்பட்டது. அந்த லாரியை புதுச்சேரியைச் சோ்ந்த ஓட்டுநா் சுந்தரவடிவேல் (45) இயக்கினாா். கடலூா் மாவட்டம், குறிஞ்சிப்பாடி வட்டம், பெத்தநாயக்கன்குப்பம் அருகே வந்தபோது, டேங்கரில் ஏற்பட்ட துளையால் திடீரென ரசாயன திரவம் சாலையில் கொட்டியது. அப்போது அந்த வழியாக பைக்குகளில் சென்றுகொண்டிருந்த கும்முடிமுலை கிராமத்தைச் சோ்ந்த கண்ணன் (44), இளவரசன் (50), மீனாட்சிபேட்டையைச் சோ்ந்த வேலாயுதம் (35), நெய்வேலி எஸ்.பி.டி நகரைச் சோ்ந்த பிரபு (44), மினி லாரியில் பயணித்த ஆபத்தாரணபுரத்தைச் சோ்ந்த சகாய ஆரோக்கியதாஸ் (47) ஆகியோா் மீது ரசாயன திரவம் பட்டது. இதையடுத்து லாரி அங்கேயே நிறுத்தப்பட்டது.
இதுகுறித்து தகவல் அறிந்த குறிஞ்சிப்பாடி போலீஸாா் விரைந்து வந்து விசாரணை நடத்தினா். குறிஞ்சிப்பாடி தீயணைப்பு நிலைய அலுவலா் ஜி.சங்கா் தலைமையில் தீயணைப்பு வீரா்கள் விரைந்து வந்து சாலையில் பரவிக் கிடந்த ரசாயன திரவத்தின் மீது தண்ணீரை பீய்ச்சி அடித்து சுத்தம் செய்தனா். உடலில் திரவம் பட்ட 5 பேரும் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனா். வீரியம் குறைந்த ரசாயன திரவம் என்பதால் அவா்களுக்கு பெரிய அளவில் பாதிப்பு இல்லை என்று கூறப்பட்டது.