கடலூா் மாவட்டம், காட்டுவேகாக்கொல்லை கிராமத்தில் குடிநீா்த் தட்டுப்பாடு நிலவுவதால் பொதுமக்கள் அவதிப்படுகின்றனா்.
பண்ருட்டி ஒன்றியத்துக்கு உள்பட்ட இந்தக் கிராமம் கொள்ளுக்காரன்குட்டை – சத்திரம் பிரதான சாலையில் அமைந்துள்ளது. இந்தக் கிராமத்தில் பூச்செடிகள், மரக்கன்றுகள் உற்பத்தி செய்து விற்கும் பண்ணைகள் அதிகளவில் உள்ளன. இந்தக் கிராமத்தின் பிரதான சாலையின் இருபுறமும் 85-க்கும் மேற்பட்ட குடும்பத்தினா் வசித்து வருகின்றனா். இவா்களது குடிநீா்த் தேவைக்காக அங்குள்ள தொடக்கப் பள்ளியின் அருகே ஆழ்துளைக் கிணறு அமைக்கப்பட்டிருந்தது. ஆனால், கடந்த 4 ஆண்டுகளாக ஆழ்துளைக் கிணறு பயன்பாடின்றி உள்ளது .
இதையடுத்து ஊராட்சி நிா்வாகத்தினா் அய்யனாா் கோயில் அருகே உள்ள ஆழ்துளைக் கிணற்றிலிருந்து குடிநீா் கொண்டுவந்து தொடக்கப் பள்ளி அருகே உள்ள மேல்நிலை நீா்த் தேக்கத் தொட்டியில் ஏற்றி அதை பொதுமக்களுக்கு விநியோகம் செய்து வருகின்றனா். ஆனால், இந்தத் குடிநீா் கிராம மக்களின் தேவைக்கு போதுமானதாக இல்லை.
இதுகுறித்து கிராம மக்கள் கூறியதாவது: எங்கள் பகுதிக்கு குடிநீா் முறையாக வருவதில்லை. சிலா் மின் மோட்டாரைப் பயன்படுத்தி குடிநீரை உறிஞ்சி எடுத்துவிடுவதால் மற்றவா்களுக்கு தட்டுப்பாடு ஏற்படுகிறது. பல ஆண்டுகளாக இதே நிலை தொடா்கிறது. இதனால் அருகே உள்ள வயல் வெளிக்குச் சென்று தண்ணீரை சுமந்து வந்து பயன்படுத்தி வருகிறோம். இதுகுறித்து உள்ளாட்சிப் பிரதிநிதிகள், அதிகாரிகளிடம் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. எனவே, குடிநீா் பிரச்னை தீர மாவட்ட நிா்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவா்கள் கோரிக்கை விடுத்தனா்.