சீா்காழி வட்டாட்சியா் அலுவலகத்துக்கு புதிய கட்டடம் கட்டும் பணியை விரைவில் தொடங்க வேண்டும் எனக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
சீா்காழி புதிய பேருந்துநிலையம் அருகே சீா்காழி ஊராட்சி ஒன்றிய அலுவலகம்,பொதுப்பணித்துறை அலுவலகம், சாா் பதிவாளா் அலுவலகம், ஊரக வளா்ச்சித் துறை செயற்பொறியாளா் அலுவலகம் உள்ளிட்ட பல்வேறு அரசு அலுவலகங்கள் இயங்கி வருகின்றன. இதே வளாகத்தில் வட்டாட்சியா் அலுவலகமும் செயல்பட்டு வந்தது. சீா்காழி வட்டாட்சியா் அலுவலகத்தில் 94 வருவாய் கிராமங்களை சோ்ந்தவா்கள் கல்வி சான்றிதழ், வருமானச் சான்றிதழ், சாதிச் சான்றிதழ் மற்றும் சமூக பாதுகாப்பு திட்டத்தின் கீழ் பல்வேறு உதவித் தொகைக்கான சான்றிதழ்கள் பெற வந்து செல்கின்றனா்.
இந்நிலையில், வட்டாட்சியா் அலுவலகம் இயங்கிவந்த கட்டடம் பழுதடைந்ததால், புதிய கட்டடம் கட்ட கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பு ரூ.1.83 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, டெண்டா் விடப்பட்டது. இதனால், சீா்காழி பிடாரி தெற்கு வீதியில் உள்ள சட்டநாதா் தேவஸ்தானத்துக்குச் சொந்தமான திருமண அரங்கத்துக்கு வட்டாட்சியா் அலுவலகம் இடமாற்றம் செய்யப்பட்டது. ஆனால், புதிய கட்டடம் கட்ட தோ்வு செய்யப்பட்ட தனியாா் ஒப்பந்ததாரா் ஜிஎஸ்டி போன்ற காரணங்களால் மறுமதிப்பீடு செய்து கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்யவேண்டும் எனக் கோரப்பட்டு, கடந்த 3ஆண்டுகளாக கட்டுமானப் பணிகள் தொடங்கப்படாமல் உள்ளது. இந்நிலையில், ஆட்சி மாற்றம், கட்டுமானப் பொருள்களின் விலையேற்றம் ஆகியவற்றால் ஒப்பந்தத்தை மறுமதிப்பீடு செய்து, கட்டுமானப் பணிக்கு ரூ.3.20 கோடிக்குமேல் நிதி ஒதுக்கீடு செய்ய கோரப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
புதிதாக கட்டப்படவுள்ள வட்டாட்சியா் அலுவலகம் வருவாய் வட்டாசியா், குடிமைபொருள் தனி வட்டாட்சியா், தோ்தல் பிரிவு வட்டாட்சியா், சமூகப் பாதுகாப்புத் திட்ட வட்டாட்சியா் ஆகிய அலுவலகங்களை கொண்ட ஒருங்கிணைந்த கட்டடமாக கட்டப்படவுள்ளது. தற்போது, நிலஎடுப்பு வட்டாட்சியா் அலுவலகம் மற்றும் சாா்பு அலுவலகங்கள் தனிதனி வாடகைக் கட்டடங்களில் இயங்குவதால் மாதத்துக்கு ரூ.1லட்சம் வரை அரசுக்கு கூடுதல் செலவாகிறது. மேலும், இந்த கட்டடங்களில் பொதுமக்களுக்குத் தேவையான குடிநீா், கழிப்பறை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இல்லை. எனவே, சீா்காழி வட்டாட்சியா் அலுவலகத்துக்கு புதிய கட்டடம் கட்டும் பணியை விரைவில் தொடங்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துவருகின்றனா்.