மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் அருகே உள்ள பழையாறு கிராமம் சுனாமி நகரை சேர்ந்தவர் மதி (வயது55). இவர் தனக்கு சொந்தமான விசைப்படகில் அதே பகுதியை சேர்ந்த ஹரிஷ் (22), புதுப்பட்டினம் தெற்கு தெருவை சேர்ந்த நகுலன் (45), முத்தையா (60), ராஜதுரை (45) ஆகியோருடன் கடந்த 2-ந் தேதி பழையாறு துறைமுகத்தில் இருந்து மீன்பிடிக்க சென்றார். மடவாமேடு கிராமம் அருகே கடலில் மீன்பிடித்து கொண்டிருந்தபோது பலத்த காற்று வீசியது. அப்போது எதிர்பாராதவிதமாக விசைப்படகு சேதம் அடைந்து, கடலில் மூழ்கியது. இதையடுத்து படகில் சென்ற மீனவர்கள் மதி உள்பட 5 பேரும் மற்றொரு விசைப்படகின் மூலம் கரை சேர்ந்தனர்.
இதைத்தொடர்ந்து கடலுக்குள் மூழ்கிய படகை பழையாறு மீனவர்கள் மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர். இதற்காக கடலூரில் இருந்து நீர்மூழ்கி வீரர்கள் 3 பேர் வரவழைக்கப்பட்டு மீட்பு பணி நடந்தது. இவர்கள் கடலுக்குள் நீந்தி சென்று மூழ்கிய படகில் கயிறு கட்டி மற்றொரு படகு மூலம் வெளியே இழுத்து வந்தனர். பழையாறு மீன்பிடி துறைமுகத்தை ஒட்டி உள்ள கரை பகுதிக்கு உடைந்த நிலையில் இருந்த படகு இழுத்து வரப்பட்டது. இதையடுத்து பொக்லின் எந்திரம் மூலம் படகு மீட்கப்பட்டது. இதுகுறித்து பழையாறு விசைப்படகு உரிமையாளர்கள் சங்க தலைவர் அருள்செழியன் கூறியதாவது:-
ரூ.20 லட்சம் மதிப்பில் உள்ள இந்த விசைப்படகு கடலில் மீன் பிடித்து கொண்டிருந்தபோது எதிர்பாராதவிதமாக தண்ணீரில் மூழ்கி விட்டது. படகில் இருந்த 5 பேரும் பத்திரமாக தப்பித்து கரையேறி விட்டனர். படகுகளுக்கு விபத்து காப்பீடு திட்டம் இல்லை. இதனால் வழக்கமாக அனைத்து படகுகளுக்கும் வழங்கப்படும் ரூ.45 ஆயிரம் மட்டுமே வழங்கப்படும். ஆனால் படகை இழந்த மீனவர்களுக்கு நிவாரணம் இதுவரை வழங்கவில்லை. விவசாய பயிர்களுக்கு காப்பீட்டு தொகை வழங்குவதுபோல், விசைப்படகை இழந்த மீனவர் குடும்பத்தினருக்கும் அரசு போதிய நிவாரண உதவித்தொகை வழங்க வேண்டும். அப்போதுதான் படகின் உரிமையாளர் வறுமையில் இருந்து மீள்வதற்கு வாய்ப்பு ஏற்படும். இயற்கை சீற்றத்தால் படகு விபத்துகுள்ளாகி தண்ணீரில் மூழ்கி விட்டால் அதற்குரிய போதிய நிவாரணத்தை தாமதம் இன்றி வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.