0 0
Read Time:3 Minute, 15 Second

விருத்தாசலம் பகுதியில் குறுவை சாகுபடி செய்த விவசாயிகள் தற்போது அறுவடை பணியை மேற்கொண்டு வருகிறார்கள். இதில் விவசாயிகள் நெல் மூட்டைகளை விற்பனை செய்யும் வகையில், இலங்கியனூர் கிராமத்தில் நேரடி நெல்கொள்முதல் நிலையம் இயங்கி வருகிறது.  இங்கு சுற்றிலும் உள்ள கிராமப்புறங்களை சேர்ந்த விவசாயிகள், நெல் மூட்டைகளை விற்பனைக்காக எடுத்து வந்திருந்தனர்.

ஆனால் கடந்த ஒரு மாத காலமாக நேரடி நெல் கொள்முதல் நிலையம் இயங்கவில்லை. இதனால் விவசாயிகள் இரவு, பகல் பாராமல் நேரடி நெல் கொள்முதல் நிலையத்திலேயே தங்களது நெல்லை வைத்துக்கொண்டு அங்கேயே காவல் இருந்தனர். இதில் நெல்லை ஆங்காங்கே விவசாயிகள் குவியல் குவியலாக குவித்து வைத்திருந்தனர்.

நேற்று முன்தினம் இரவு திடீரென அந்த பகுதியில் கனமழை பெய்தது. இதனால், நெல் குவியல்கள் மழையில் நனைந்து போனது. விவசாயிகள் அவசர அவசரமாக தார்ப்பாய்களை கொண்டு மூடி பாதுகாத்தனர். இருப்பினும் அந்த பகுதியில் பெருக்கெடுத்து ஓடிய நீர் நெல் குவியலையும் சூழந்து நின்றது. இதனால் விவசாயிகளின் முயற்சி பலனளிக்காமல் போனது. ஏற்கனவே கடந்த 2 நாட்களுக்கு முன்பு பெய்த மழையால் நெல் மணிகள் நனைந்து போய் இருந்தன. 
அவைகள் அனைத்தும் தற்போது முளைக்க தொடங்கிய நிலையில், மீண்டும் மழையில் நெல் நனைந்து போனது அவர்களை மேலும் கவலையடைய செய்துள்ளது.

இதுகுறித்து விவசாயிகள் கூறும்போது ஒரு மாதத்திற்கும் மேலாக நெல்லை விற்பனைக்காக கொண்டு வந்து காத்திருக்கிறோம். ஆனால் அரசு அதிகாரிகள் எங்களை கண்டு கொள்ளாமல், வியாபாரிகள் எடுத்து வரும் நெல்லை மட்டுமே கொள்முதல் செய்து விட்டு சென்று விடுகின்றனர். 

விவசாயிகளுக்காக நேரடி நெல் கொள்முதல் நிலையம் திறக்கப்பட்டும், தனியார் வியாபாரிகளுக்கு மட்டுமே நெல் கொள்முதல் நிலையம் செயல்படுகிறது. தற்போது பெய்த மழையால் சுமார் 10 ஆயிரம் மூட்டை நெல்கள் மழையில் நனைந்து போனது. மேலும் ஏற்கனவே பெய்த மழையில் நனைந்த நெல்கள் முளைக்க தொடங்கி விட்டது. இந்த நஷ்டத்துக்கு அதிகாரிகளே பொறுப்பு ஏற்க வேண்டும் என்று தெரிவித்தனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %