ஊரடங்கு தளர்வுகளின்படி மயிலாடுதுறையில் மதுக்கடைகள் நேற்று திறக்கப்பட்டன. மதுப்பிரியர் ஒருவர் சூடம் ஏற்றி, தேங்காய் உடைத்து மது வாங்கிச்சென்றார்.
தமிழகத்தில் கொரோனா வைரஸ் தாக்கம் குறைந்து வரும் நிலையில் அனைத்து மாவட்டங்களிலும் ஒரே மாதிரியான தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு நேற்று முதல் அமலுக்கு வந்தது. அதன்படி வழிபாட்டு தலங்கள், டாஸ்மாக் மதுக்கடைகளை நேற்று முதல் திறக்க தமிழக அரசு அனுமதி வழங்கியது. ஊரடங்கு தளர்வுகளின்படி மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள 102 டாஸ்மாக் மதுக்கடைகளும் நேற்று திறக்கப்பட்டன. மதுக்கடைகளில், மதுப்பிரியர்கள் சமூக இடைவெளியுடன் மது வாங்கி செல்ல வட்டங்கள் வரையப்பட்டு இருந்தன.
மயிலாடுதுறை காமராஜர் பஸ் நிலையம் பின்புறம் உள்ள ஒரு மதுக்கடையில் மதுவாங்க வந்த மதுப்பிரியர் ஒருவர், சூடம் ஏற்றி தேங்காய் உடைத்து மகிழ்ச்சியுடன் மதுபாட்டில்களை வாங்கிச்சென்றார். அப்போது அவர் கூறுகையில், ‘கடந்த 2 மாதங்களாக மது குடிக்க முடியாமல் அவதிப்பட்டு வந்தேன். மதுக்கடை எப்போது திறக்கும் என்று காத்திருந்தேன். தற்போது மதுக்கடைகள் திறந்து உள்ளதால் மகிழ்ச்சியில் வேண்டுதல் நிறைவேறிய உணர்வுடன் சூடம் ஏற்றி, தேங்காய் உடைத்து மது வாங்கினேன்’ என்றார். மதுக்கடைகள் திறக்கப்பட்டாலும் மயிலாடுதுறை பகுதியில் உள்ள மதுக்கடைகளில் நேற்று கூட்டம் குறைவாகவே காணப்பட்டது.