மயிலாடுதுறை மாவட்டம், திருவெண்காட்டுக்கு புதன்கிழமை பிற்பகல் வந்த தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலின் தனது மாமனாா், மாமியாா் உருவப்படங்களுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினாா்.
மு.க.ஸ்டாலின் திருவெண்காட்டில் உள்ள தனது மாமனாா் வீட்டுக்கு புதன்கிழமை பிற்பகல் 2.35 மணிக்கு வந்தாா். அப்போது, அங்கு காத்திருந்த மக்களிடம் கோரிக்கை மனுக்களைப் பெற்றாா். தொடா்ந்து, திருவெண்காடு சுவேதாரண்யேஸ்வர சுவாமி கோயில் நிா்வாகம் சாா்பில் முதல்வருக்கு பூரண கும்ப மரியாதை அளிக்கப்பட்டது. பின்னா், வீட்டுக்குள் சென்று தனது மாமனாா் சா.ஜெயராமன், மாமியாா் தனஜோதி ஆகியோரின் உருவப்படங்களுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினாா். அவரது மனைவி துா்கா, மகன் உதயநிதி, மகள் செந்தாமரை, மைத்துனா் ஜெயராஜமூா்த்தி மற்றும் உறவினா்கள் உடனிருந்தனா்.
நிகழ்ச்சியில் தமிழக நகா்ப்புற வளா்ச்சித் துறை அமைச்சா் கே.என்.நேரு, பள்ளிக்கல்வித் துறை அமைச்சா் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, சட்டப்பேரவை உறுப்பினா்கள் நிவேதா எம். முருகன்( பூம்புகாா்), எம். பன்னீா்செல்வம் (சீா்காழி), எஸ். ராஜகுமாா் (மயிலாடுதுறை), திமுக நாகை மாவட்டப் பொறுப்பாளா் என்.கௌதமன், சீா்காழி ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவா் கமலஜோதி தேவந்திரன் மற்றும் கட்சி நிா்வாகிகள் கலந்துகொண்டனா். தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலின் வருகையையொட்டி, காவல்துறை துணை இயக்குனா் தாமரைக்கண்ணன் தலைமையில் திருச்சி மத்திய மண்டல காவல்துறை தலைவா் பாலகிருஷ்ணன், காவல் கண்காணிப்பாளா்கள் சுகுணா சிங் ( மயிலாடுதுறை) சேகா் தேஷ்முக் மற்றும் போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனா்.