மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் அருகே உள்ள பழையாறு மீன்பிடித் துறைமுகம் மாவட்டத்திலேயே சிறந்த துறைமுகமாக விளங்கி வருகிறது. இந்த துறைமுகத்தின் மூலம் தினந்தோறும் 350 விசைப்படகு, 300 பைபர் படகுகள் மற்றும் 250 நாட்டுப் படகுகள் மூலம் மீனவர்கள் கடலுக்குள் சென்று மீன் பிடித்து வருகின்றனர்.
இங்கு பிடிக்கப்படும் மீன்கள் தமிழகத்தில் உள்ள பல இடங்களுக்கு எடுத்து சென்று விற்பனை செய்யப்படுகிறது. இங்கு பல வகையான மீன்கள் கிடைத்தாலும் மத்தி மீன்கள் தற்போது அதிகமாக கிடைத்து வருகிறது. ஆனால் சென்ற ஆண்டைவிட இந்த ஆண்டு குறைவான அளவே கிடைக்கின்றன என்று மீனவர்கள் தெரிவித்தனர்.
பழையாறு துறைமுகத்திலிருந்து கேரளாவுக்கு தினந்தோறும் சில வகையான மீன்கள் அனுப்பி வைக்கப்பட்டாலும், இதில் அதிகம் மத்தி மீன்கள் அனுப்பி வைக்கப்படுகின்றன. இதில் அங்கிருந்து வரும் வியாபாரிகள் அதிகளவில் மத்தி மீன்களையே வாங்கி செல்கின்றனர். மருத்துவ குணம் வாய்ந்த மற்றும் நோய் எதிர்ப்பு சக்தி அதிகம் உள்ளதால் விரும்பி வாங்குகின்றனர் என்று தெரிவிக்கின்றனர்.
இதுகுறித்து பழையாறு கருவாடு மற்றும் மீன்கள் வியாபாரிகள் சங்க தலைவர் பொன்னையா கூறுகையில், தற்போது பழையாறு மீன்பிடி துறைமுகத்தில் பல வகையான மீன்கள் கிடைத்தாலும், மத்தி மீன்கள் கேரள மாநிலத்துக்கு அதிக அளவில் விற்பனைக்கு அனுப்பப்பட்டு வருகிறது. சென்ற வருடத்தை விட இந்த வருடம் மத்தி மீன்கள் குறைவாகவே கிடைக்கிறது. இந்த மீன்கள் ஒரு கிலோ ரூ.200 மற்றும் அதற்கு மேலும் விற்பனை செய்யப்படுகிறது. மத்தி மீன்கள் கிடைக்கும் காலங்கள் மேலும் இரண்டு மாதங்கள் உள்ளன. இனிமேல் மத்தி மீன்கள் அதிகளவில் கிடைத்தால் ஓரளவுக்கு லாபம் கிடைக்கும் என்றார்.