சிதம்பரம் முருகபிரியா நகரை சேர்ந்தவர் மாரியப்பன் (வயது 58). இவர் அசாம் மாநிலத்தில் மத்திய ரிசர்வ் போலீஸ் படையில் சப்-இன்ஸ்பெக்டராக பணிபுரிந்து வருகிறார். இவருடைய மனைவி ஜெயலட்சுமி (48). இவர் தனது மகன், மகள்களுடன் முருகபிரியா நகரில் வசிக்கிறார்.
இந்த நிலையில் கடந்த மாதம் 11-ந்தேதி ஜெயலட்சுமி தனது மகன், மகளுடன் சென்னையில் உள்ள உறவினர் வீட்டுக்கு சென்றார். பின்னர் அவர், ஒரு மாதம் கழித்து அங்கிருந்து புறப்பட்டு நேற்று மாலை வீடு திரும்பினார்.
அப்போது அவர் முன்பக்க கதவை திறந்து உள்ளே சென்றார். அப்போது வீட்டின் பின்பக்க கதவு உடைக்கப்பட்ட நிலையில் கிடந்தது. இதை பார்த்து அதிர்ச்சியடைந்த அவர் உள்ளே சென்று பார்த்த போது, பீரோ கதவு உடைக்கப்பட்டு கிடந்தது. மேலும் அதில் இருந்த 16 பவுன் நகைகளை காணவில்லை.
ஒரு மாதமாக வீடு பூட்டியே இருந்ததை நோட்டமிட்ட மர்ம மனிதர்கள் கதவை உடைத்து உள்ளே புகுந்து நகைகளை கொள்ளையடித்து சென்று இருப்பது தெரியவந்தது.
இதுபற்றி தகவல் அறிந்த சிதம்பரம் துணை போலீஸ் சூப்பிரண்டு ரமேஷ்ராஜ், தாலுகா இன்ஸ்பெக்டர் விஜி, சப்-இன்ஸ்பெக்டர் தனசேகரன் மற்றும் போலீசார் நேரில் சென்று விசாரித்தனர். மேலும் கடலூரில் இருந்து கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு, சம்பவ இடத்தில் பதிவான கைரேகைகளை பதிவு செய்தனர்.இதுகுறித்து தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து, மர்ம மனிதர்களை வலைவீசி தேடி வருகின்றனர். கொள்ளைபோன நகையின் மதிப்பு ரூ.5½ லட்சம் இருக்கும் என்று கூறப்படுகிறது. இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.