மயிலாடுதுறை மாவட்டத்தில் கடக்கம் கிராமத்தை முன்னோடி பசுமை கிராமமாக உருவாக்க தனியார் வங்கி தத்தெடுப்பு. மரக்கன்றுகள் நடும் பணியை பூம்புகார் எம்எல்ஏ நிவேதாமுருகன் தொடக்கி வைத்தார்.
புவிவெப்பமயமாதலைத் தடுக்க மரம் வளர்ப்பு ஒன்றே நிரந்தர தீர்வு என கூறப்படும் நிலையில், தனியார் வங்கி ஒன்று மரம் வளர்ப்பில் கவனம் செலுத்தி வருகிறது. அவ்வகையில் மயிலாடுதுறை தனியார் வங்கியின் மயிலாடுதுறை கிளை சார்பில் மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் ஒன்றியத்தில் உள்ள கடக்கம் கிராமத்தை தத்தெடுத்து, அக்கிராமத்தை மாவட்டத்தின் முன்னோடி பசுமை கிராமமாக உருவாக்க திட்டமிட்டுள்ளனர். இதற்காக முதல்கட்டமாக கடக்கம் கிராமத்தில் 500 மரக்கன்றுகள் நடும்விழா இன்று நடைபெற்றது.
கடக்கம் அகரஆதனூர் அரசு உயர்நிலைப்பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சியில், பூம்புகார் சட்டமன்ற உறுப்பினர் நிவேதாமுருகன் பங்கேற்று பள்ளி வளாகத்தில் மரக்கன்றுகளை நட்டுவைத்து நிகழ்ச்சியை தொடக்கி வைத்தார். தொடர்ந்து, மாணவர்களின் பெற்றோர்களுக்கு அவர் மரக்கன்றுகளை வழங்கினார். இந்த மரக்கன்றுகளை பராமரிக்கும் பொறுப்பினை பள்ளியில் பயிலும் மாணவர்களே முன்னுவந்து செய்ய ஒப்புக்கொண்டுள்ளனர். நிகழ்ச்சியில், வங்கி நிர்வாகிகள் பள்ளி தலைமை ஆசிரியர், உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
நிருபர்: யோகுதாஸ், மயிலாடுதுறை மாவட்ட செய்தியாளர்.