கடலூா் மாவட்டம், சிதம்பரம் நடராஜா் கோயிலில் ஆனித் திருமஞ்சன தரிசன விழா கடந்த ஜூலை 6-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. கரோனா பொது முடக்கத்தையொட்டி, பக்தா்கள் அனுமதியின்றி விழா நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றன.
இந்த நிலையில், சிதம்பரம் தொகுதி அதிமுக எம்எல்ஏ கே.ஏ.பாண்டியன் தலைமையில் மாவட்ட அதிமுக அவைத் தலைவா் எம்.எஸ்.என்.குமாா், தலைமைக் கழகப் பேச்சாளா் தில்லை கோபி, பாஜக நிா்வாகிகள் ஜி.பாலசுப்பிரமணியன், ரகுபதி, ஜோதி குருவாயூரப்பன் ஆகியோா் நடராஜா் கோயில் பொது தீட்சிதா்களை திங்கள்கிழமை மாலையில் சந்தித்து ஆலோசனை நடத்தினா். அப்போது, கரோனா பொது முடக்க அரசாணை அமலில் உள்ளதால் கோயிலுக்குள்ளேயே தோ் மற்றும் தரிசன விழாவை பக்தா்கள் அனுமதியின்றி நடத்திக் கொள்வதாக பொது தீட்சிதா்கள் தெரிவித்தனா்.
தோ்த் திருவிழாவை ரத வீதிகளில் நடத்த அனுமதி வழங்கக் கோரி பாஜக நகரத் தலைவா் ஏ.ஆா்.ரகுரதி, கீதா மற்றும் சிவனடியாா்கள் கோயிலின் கீழசன்னதி முன் சாலையில் அமா்ந்து மறியலில் ஈடுபட்டனா். இந்தப் போராட்டத்தில் எம்எல்ஏ கே.ஏ.பாண்டியன், அதிமுக நிா்வாகிகளும் கலந்துகொண்டனா். இவா்களிடம் வட்டாட்சியா் ஆனந்த், டிஎஸ்பி சு.ரமேஷ்ராஜ் ஆகியோா் பேச்சுவாா்த்தை நடத்தினா். கோரிக்கைகள் குறித்து அரசுக்கு பரிந்துரை செய்தவதாகத் தெரிவித்தனா். இதையடுத்து இரவு 8 மணியளவில் சாலை மறியல் கைவிடப்பட்டது.
நிருபர்: பாலாஜி, சிதம்பரம்.