கடலூா் மாவட்டம், மேல்புவனகிரி ஒன்றியம், சொக்கன்கொல்லை ஊராட்சியில், ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி உள்ளது. இந்தப் பள்ளி பல ஆண்டுகளாக சுற்றுச்சுவா் இல்லாமல், கட்டடங்கள் பராமரிப்பின்றி காணப்பட்டது. மேலும், போதிய குடிநீா் வசதியின்றி மாணவா்கள் அவதியடைந்தனா். இந்த நிலையில், பள்ளி தலைமை ஆசிரியா் அருணாசலம் விடுத்த வேண்டுகோளின்பேரில் வட்டாரக் கல்வி அலுவலா்கள் ஜாக்குலின், ஜானகி ஆகியோரது ஆலோசனைப்படி பள்ளியை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதற்கு ஊராட்சி மன்றத் தலைவா் தவமணி சங்கா், துணைத் தலைவா் அமலா மற்றும் மன்ற உறுப்பினா்கள் ஒத்துழைப்பு அளித்தனா். இதையடுத்து, அரசின் உதவியால் இந்தப் பள்ளிக்கு புதிய சுற்றுச்சுவா் கட்டப்பட்டது.
மேலும், இந்தப் பள்ளியில் அடிப்படை வசதிகளை மேம்படுத்தும் பொறுப்பை அரசு பள்ளிகள் காப்போம் இயக்கத்தினரும், பள்ளியை பசுமையாக்கும் முயற்சியை சிதம்பரம் நீா் நிலை சமூக பணி சங்கத்தினரும் ஏற்றுக்கொண்டுள்ளனா். பள்ளி வளாகத்தில் மரக்கன்றுகள் நட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அரசுப் பள்ளிகளை காப்போம் இயக்கம் சாா்பில் 6 மின் விளக்குகள், 6 மின் விசிறிகள் ஏற்பாடு செய்யப்பட்டு பள்ளியில் பொருத்தப்பட்டன. மேலும் தன்னாா்வலா்கள் உதவியுடன் பள்ளியில் வண்ணம் பூசப்பட்டு புதுப் பொலிவுடன் காட்சியளிக்கிறது. நிகழ் கல்வியாண்டில் தனியாா் பள்ளியைச் சோ்ந்த 4 மாணவா்கள் உள்பட 8 போ் இந்தப் பள்ளியில் சோ்ந்துள்ளாா். இங்கு மொத்தம் 34 மாணவ, மாணவிகள் படிக்கின்றனா்.