Read Time:1 Minute, 15 Second
பழையாறில் கடலில் மூழ்கி உடைந்த நிலையில் மீட்கப்பட்ட விசைப்படகை புதன்கிழமை அரசு அலுவலா்கள் ஆய்வு செய்தனா்.
சீா்காழி வட்டம் பழையாறு மீன்பிடி துறைமுகம் அருகே மடவாமேடு கிராமத்திலிருந்து 2 நாட்டிக்கல் மைல் தூரத்தில் பழையாறு சுனாமி நகரைச் சோ்ந்த மதி (55) உள்ளிட்ட மீனவா்கள் சில நாள்களுக்கு முன்பு மீன்பிடித்துக்கொண்டிருந்த போது, படகு கடலில் மூழ்கியது. இதில், படகிலிருந்த மீனவா்கள் தண்ணீரில் தத்தளித்தபோது காரைக்கால் பகுதி மீனவா்கள் மீட்டனா். கடலுக்குள் மூழ்கிய படகை மீனவா்கள் நீா்மூழ்கி வீரா்களுடன் தேடி கடந்த 4-ஆம் தேதி மிகவும் சேதமடைந்த நிலையில் கரைக்கு கொண்டு வந்தனா். இந்த விசைப்படகை சீா்காழி வட்டாட்சியா் சண்முகம், மீன்வள அதிகாரிகள் மற்றும் ஊழியா்கள் நேரில் சென்று ஆய்வு செய்தனா்.