‘ட்ரோன்களை’ பயன்படுத்துவதற்கான, புதிய சட்ட விதிகளின் வரைவை மத்திய விமான போக்குவரத்து அமைச்சகம் வெளியிட்டுள்ளது.
கடந்த மார்ச் மாதத்தில், ட்ரோன்களை பயன்படுத்துவது குறித்த சட்ட விதிகள் அறிமுகப்படுத்தப்பட்டன. இந்நிலையில், அந்த விதிகளை எளிமையாக்கும் வகையில், தற்போது புதிய சட்ட விதிகள் வெளியிடப்பட்டுள்ளன. இதற்கான வரைவு அறிக்கை நேற்று வெளியிடப்பட்டது. ஆகஸ்ட் மாதம் 5 ஆம் தேதி வரை, பொதுமக்கள் இந்த புதிய விதிகள் தொடர்பான தங்கள் கருத்தை தெரிவிக்கலாம்.
இதுதொடர்பாக, விமான போக்குவரத்து துறை அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா கூறியுள்ளதாவது, “ட்ரோன்கள் மூலம், உலக முழுவதும் புதிய தொழில்நுட்ப புரட்சி ஏற்பட்டுள்ளது. நேரம் மிச்சப்படுவதுடன், அதனை இயக்குவதும் எளிதாக உள்ளது. இந்த தொழில்நுட்ப வளர்ச்சியை முழுமையாக பயன்படுத்த வேண்டும். அதன்படி சட்ட விதிகளில் பல மாற்றங்கள் செய்து எளிமையாக்கப்பட்டுள்ளது. ட்ரோன்களை இயக்குவதற்கான, உரிமம் பெறுவதற்கான விண்ணப்பங்கள் 25இல் இருந்து, 6 ஆக குறைக்கப்பட்டுள்ளது. நம்பிக்கை சுயசான்று மற்றும் அத்துமீறல் இல்லாத கண்காணிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் இந்த புதிய விதிகள் உள்ளன. ட்ரோன் இயக்குவதற்கான ’லைசென்ஸ்’ கட்டணம் குறைக்கப்பட்டுள்ளது. மேலும், பைலட் லைசென்ஸ் போன்ற கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டுள்ளன”, என கூறினார்.