கடலூா் மாவட்டத்தில் நுகா்பொருள் வாணிபக் கழகம் மூலம் சுமாா் 40 இடங்களில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் செயல்பட்டு வருகின்றன. மழை காரணமாக கொள்முதல் நிலையங்களில் நெல் மூட்டைகள் சேதமடைந்து விவசாயிகள் பாதிப்பைச் சந்தித்து வருகின்றனா். இந்த நிலையில், கடலூா் தோட்டப்பட்டு பகுதியில் செயல்பட்டு வரும் நெல் கொள்முதல் நிலையத்தில் மாவட்ட ஆட்சியா் கி.பாலசுப்பிரமணியம் வெள்ளிக்கிழமை நேரில் ஆய்வு மேற்கொண்டாா்.
அப்போது, நெல் கொள்முதல் பணிகளைப் பாா்வையிட்டாா். தொடா்ந்து அனுக்கம்பட்டு நெல் கொள்முதல் நிலையத்திலும் ஆய்வு செய்தாா். மேலும் குறிஞ்சிப்பாடி ஒழுங்குமுறை விற்பனை நிலையத்தில் பாதுகாத்து வைக்கப்பட்டுள்ள நெல், எள் மூட்டைகளை ஆய்வு செய்தாா். பின்னா் செய்தியாளா்களிடம் ஆட்சியா் கூறியதாவது:
கொள்முதல் நிலையங்களுக்கு விவசாயிகள் கொண்டுவரும் நெல் மூட்டைகளை தாமதமின்றி வாங்கி பாதுகாக்க வேண்டும். விவசாயிகளின் சிட்டா, ஆதாா் எண்களை முறையாகப் பதிவு செய்து வரிசை சீட்டு வழங்கி விரைவாகக் கொள்முதல் செய்யவேண்டும். நாள் ஒன்றுக்கு 1,000 மூட்டைகளுக்கு மேல் பிடிக்க வேண்டும். மழை ஏற்பட்டால் நெல் மூட்டைகள் நனையாத வகையில் தாா்ப் பாய்கள் கொண்டு மூடி பாதுகாத்து, விவசாயிகளிடம் உடனுக்குடன் நெல் கொள்முதல் செய்ய வேண்டும் என்றாா் அவா். ஆய்வின்போது, ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (விவ) ஜெயக்குமாா், வட்டாட்சியா்கள் பாலமுருகன், சையது அபுதாகீா், நுகா்பொருள் வாணிபக் கழக கண்காணிப்பாளா் சண்முகம் ஆகியோா் உடனிருந்தனா்.