மணல்மேடு அருகே கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட வாலிபரை கைது செய்து, அவரிடம் இருந்து 2 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.
மணல்மேடு பட்டவர்த்தி பாலம் அருகில் உள்ள திடலில் கஞ்சா விற்பனை நடைபெறுவதாக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்திற்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் பேரில் மயிலாடுதுறை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுகுணாசிங் உத்தரவின்பேரில், தனிப்படை சப்-இன்ஸ்பெக்டர் இளையராஜா தலைமையில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் ரமேஷ் மற்றும் நரசிம்மபாரதி, அசோக்குமார், கார்த்தி உள்ளிட்ட போலீசார் கஞ்சா வாங்க செல்வது போன்று சென்று, அங்கு கஞ்சா விற்பனையில் ஈடுபட்டிருந்த நபரை சுற்றிவளைத்து பிடித்து விசாரணை செய்தனர்.
விசாரணையில் அவர் இளந்தோப்பு மெயின்ரோட்டை சேர்ந்த குமார் மகன் கோகுல்பிரசாத் (வயது 21) என்பதும், அவர் வீட்டில் கஞ்சாவை பதுக்கி வைத்து கொஞ்சம் கொஞ்சமாக கொண்டு சென்று, திடலில் வைத்து விற்பனை செய்ததும் தெரியவந்தது. இதையடுத்து அவரது வீட்டிற்கு சென்று போலீசார் சோதனை செய்தனர். அப்போது அங்கு பதுக்கி வைத்திருந்த 2 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.இதையடுத்து கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வந்த கோகுல்பிரசாத் மணல்மேடு போலீசில் ஒப்படைக்கப்பட்டார். இதையடுத்து மணல்மேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து கோகுல்பிரசாத்தை கைது செய்தனர்.