கடலூரில் கைவிடப்பட்ட பெட்ரோ கெமிக்கல் ரசாயன ஆலை திட்டத்தை டிசிஜி நிறுவனம் மிகப்பெரிய அளவில் புத்தாக்கம் செய்து செயல்படுத்த உள்ளது.
கடலூரில் நாகார்ஜுனா ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனம் 2 ஆயிரத்து 186 ஏக்கர் பரப்பில் பெட்ரோலிய சுத்திகரிப்பு ஆலை கட்டுமான பணிகளை 2011ஆம் ஆண்டு தொடங்கியது. தமிழ்நாட்டின் மிகப்பெரிய தனியார் துணை முதலீடாகவும் இது பார்க்கப்பட்டது. ஆனால் இப்பணிகள் முடியும் தருவாயில் இருந்த நிலையில் 2011ஆம் ஆண்டு நவம்பர் மாதம் வீசிய தானே புயலால் கட்டுமானங்கள் முழுமையும் சீரழிந்தன. இதனால் ஆலை அமைக்கும் திட்டம் நிறுத்தப்பட்டது. இந்நிலையில் இந்த ஆலையை தேசிய கம்பெனிகள் சட்ட தீர்ப்பாயம் மூலம் ஹால்தியா பெட்ரோகெமிக்கல்ஸ் நிறுவனம் முறைப்படி கையகப்படுத்தியுள்ளது. இதையடுத்து கடலூர் பெட்ரோ கெமிக்கல் ஆலையை புத்தாக்கம் செய்து உற்பத்திப் பணிகளை ஹால்தியா பெட்ரோ கெமிக்கல்ஸ் நிறுவனத்தின் முதன்மை நிறுவனமான டிசிஜி குரூப் மேற்கொள்ள உள்ளது.
சர்வதேச அளவில் செயல்பட உள்ள கடலூர் பிரிவு ஆலைக்கான தலைமை செயல் அதிகாரியாக பி.ஆனந்த் நியமிக்கப்பட்டுள்ளதாக டிசிஜி நிறுவனம் தெரிவித்துள்ளது. இவர் பிரபல எஸ்ஸார் குழுமத்தில் எரிசக்தி பிரிவில் உயர் பதவியில் இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. கடலூரில் அமைய உள்ள இந்த பிரமாண்டமான ஆலை அப்பகுதியின் பொருளாதார வளர்ச்சிக்கும் உதவும் எனக் கூறப்படுகிறது.