மயிலாடுதுறை மாவட்டத்தில் கொடியம்பாளையம் முதல் தரங்கம்பாடி வரை பல்வேறு மீனவ கிராமங்கள் உள்ளன தமிழக அரசு மற்றும் உயர் நீதிமன்றம் ஆகியவை கடல் வளத்தை பாதுகாக்கும் வகையில் சுருக்குமடி வலை பயன்படுத்தக் கூடாது என உத்தரவிட்டுள்ளது. இதில் மயிலாடுதுறை மாவட்டத்தில் 13 மீனவ கிராமங்கள் சுருக்குமடி வலையை ஆதரித்து சுருக்குமடி வலையை பயன்படுத்தி தொழில் செய்ய வலியுறுத்தி தொடர்ந்து போராடி வருகின்றனர்.
ஆனால் அரசு உத்தரவுப்படி மீன்வளத் துறையினர் சுருக்குமடி வலையை பயன்படுத்தக்கூடாது என்று கடுமையாக உத்தரவிட்டு கண்காணித்து வருகின்றனர். இதனால் கடந்த சில மாதங்களாக சுருக்குமடி வலை பயன்படுத்தி மீன்பிடிக்கும் மீனவர்கள் தொழில் செய்ய முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. இதனால் சுருக்குமடி வலை ஆதரவு மீனவர்கள் வாழ்வாதாரம் கடந்த 2 ஆண்டுகளாக பாதிக்கப்பட்டுள்ளதா கூறி தொடர்ந்து அரசுக்கு கோரிக்கை விடுத்து வந்தனர்.
இந்நிலையில் சுருக்குமடி வலையை பயன்படுத்தி மீன்பிடிக்க அனுமதி கோரும் விவகாரத்தில் ஆதரவான நிலைப்பாடு எதுவும் மீனவர்களுக்கு அரசு தரப்பிலிருந்து உத்தரவாதம் அளிக்கப்படவில்லை. இதனையடுத்து பல மாதங்களாக காத்திருந்த சுருக்கு மடி வலை மீனவர்கள் கடந்த 17-ஆம் தேதி முதல் மயிலாடுதுறை மாவட்டத்தில் மீனவர்கள் தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தை அறிவித்து உண்ணாவிரதம் தொடங்கினர்.
மயிலாடுதுறை மாவட்டத்தில் சீர்காழியை அடுத்த திருமுல்லைவாசல், மடவாமேடு, பூம்புகார் மற்றும் சந்திரபாடி ஆகிய பகுதிகளில் சுருக்குமடி வலையை ஆதரித்து தொழில் செய்ய அனுமதி கோரியும், 21 வகையான மீன்பிடி ஒழுங்குமுறை சட்டங்களை அமல்படுத்த கோரியும் போராட்டத்தை மீனவர்கள் தொடங்கினர். இதில் திருமுல்லைவாசல் உள்ளிட்ட பகுதியை சேர்ந்த மீனவர்கள் திருமுல்லைவாசல் முகத்துவாரம் பகுதியில் சாமியானா அமைத்து 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீனவர்கள் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டனர்.
அப்போது மீனவர்கள் 2-வது நாள் திடீரென திருமுல்லைவாசல் கடலில் இறங்கி போராட்டத்தை தொடர்ந்தனர். ஆண்கள் பெண்கள் என ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீனவர்கள் கடலில் இறங்கி போராடிய போது 3 மீனவப் பெண்கள் மயங்கி கடலில் விழுந்தனர். இதில் கடல் அலையில் சிக்கிய மீனவப் பெண்களை சக மீனவர்கள் காப்பாற்றி ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். இந்த சம்பவத்தால் கடற்கரையில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
கடலில் இறங்கி போராடிய மீனவர்களிடம் இன்ஸ்பெக்டர் ராமமூர்த்தி பேச்சுவார்த்தை நடத்தினார். ஆனால் மீன்வளத்துறை அதிகாரிகள் தான் பேச வேண்டுமென கோரி தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். அதன் பின்னர் மீண்டும் உண்ணாவிரதப் பந்தலுக்கு வந்து போராட்டத்தை இரவும் தொடர்ந்தனர். இதேபோல் மடவாமேடு, பூம்புகார் பகுதியிலும் இன்று 3-வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.