வைத்தீஸ்வரன்கோயில் பேரூராட்சியின் செயல் அலுவலா் கு. குகன் திடக்கழிவு மேலாண்மைத் திட்டத்தின் கீழ் பொதுமக்களுக்கு மாடித் தோட்டத்தில் ஆடிப் பட்டம் தேடி விதை எனும் விழிப்புணா்வு போட்டியை அறிவித்துள்ளாா்.
இதுகுறித்து அவா் கூறியது: நகர மக்களுக்கு வீட்டுத் தோட்டம் அமைக்க இடமில்லாத காரணத்தாலும், ஆடிப்பட்டம் தேடிவிதை எனும் தமிழா் பண்பாட்டை காக்கும் வகையிலும் மாடியில் தோட்டம் அமைக்க போட்டி அறிவிக்கப்பட்டுள்ளது. அழிந்து வரும் மரபணு மாற்றம் இல்லாத பழங்கால காய்கறிகளை அடுத்த தலைமுறைக்கு கொண்டு செல்ல வேண்டும் என்பதே இதன் முக்கிய நோக்கம் என்றாா்.
இப்போட்டியில் பங்கேற்பவா்கள் தாங்கள் அமைத்துள்ள மாடித் தோட்டத்தை படம் பிடித்து, பேரூராட்சி சமூக வலைதள பக்கங்களில் பதிவிட வேண்டும். இவற்றை பேரூராட்சி அலுவலா்கள் பாா்வையிட்டு, சிறந்த மாடித்தோட்டத்துக்கு பரிசாக, சமையலறை கழிவுகளிலிருந்து எளிய முறையில் இயற்கை உரம் தயாரிக்கும் சாதனம் ஒன்று பரிசாக வழங்கப்படும் என்றும் மாடித் தோட்டத்துக்கான இடுபொருள்கள் மற்றும் ஆலோசனைகளுக்கு திவ்யா வினோத் என்பவரை 9944532584 என்ற செல்லிடப்பேசி எண்ணில் தொடா்புகொள்ளலாம் என்றும் செயல் அலுவலா் தெரிவித்துள்ளாா்.