பூம்புகார் சுற்றுலாத்தலம் 1972-ம் ஆண்டு அப்போதைய தமிழக முதல்-அமைச்சர் கருணாநிதியால் உருவாக்கப்பட்டது. இந்த சுற்றுலாத்தலத்தை காண தினந்தோறும் சுற்றுலா பயணிகள் மற்றும் திரளான பொதுமக்கள் வரவேண்டும் என்ற நோக்கத்தில் சென்னை-நாகை தேசிய நெடுஞ்சாலையில் பூம்புகார் எல்லையான கருவியில் இருந்து பூம்புகார் வரை கோவலன், கண்ணகி, மாதவி, கரிகால சோழன், இளங்கோவடிகள் ஆகிய பெயரை கொண்ட தோரண வாயில்கள் பூம்புகார் கலைக்கூடம் வரை கலை நயத்துடன் அமைக்கப்பட்டது.
அதில் இருந்து தோரண வாயில்கள் நெடுஞ்சாலை துறை மூலம் பராமரிக்கப்பட்டு வந்தது. ஆனால் கடந்த பல ஆண்டுகளாக பராமரிப்பு இன்றி பொலிவிழந்து காணப்படுகிறது.
இதுகுறித்து பூம்புகார் வியாபாரிகள் சங்க தலைவர் சங்கர் கூறுகையில், அப்போதைய தமிழக முதல்-அமைச்சர் கருணாநிதியால் கலைநயத்துடன் உருவாக்கப்பட்ட தோரண வாயில்கள் தற்போது பொலிவிழந்து காணப்படுகிறது. சீர்காழி உட்கோட்ட நெடுஞ்சாலை துறை மூலம் ஆண்டுதோறும் கோடிக்கணக்கான ரூபாய் மதிப்பீட்டில் சாலை பணிகள் நடந்து வருகின்றன.
ஆனால் சரித்திர புகழ்பெற்ற தோரணவாயில்களை, பராமரிக்க நெடுஞ்சாலைத்துறை ஆர்வம் காட்டுவதில்லை, இந்த தோரணவாயில்களை சீரமைக்கக்கோரி பலமுறை சீர்காழி உட்கோட்ட நெடுஞ்சாலைத்துறை பொறியாளரை சந்தித்து மனு அளித்தும் நடவடிக்கை மேற்கொள்ளவில்லை. எனவே சரித்திர புகழ்பெற்ற தோரண வாயில்கள் சீரமைக்கப்படுமா? என்பது பொதுமக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது என்றார்.