சட்டப்பேரவை தேர்தலுக்கு முன் அதிமுக ஆட்சியில் அவசரமாக இறுதி செய்யப்பட்ட 660 சாலை ஒப்பந்தங்களை சென்னை மாநகராட்சி ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது!
தமிழக சட்டமன்ற தேர்தலுக்கு முன்பு அதிமுக ஆட்சியில் மாநகராட்சியில் வழங்கப்பட்ட ஒப்பந்தங்களில் பல்வேறு முறைகேடு நடந்துள்ளதாக தொடர்ந்து புகார்கள் வந்து கொண்டு இருந்தது. குறிப்பாக சட்டமன்ற தேர்தலின் போது நடத்தை விதிமுறைகளை மீறி சென்னையில் 3,200 சாலைகள் புனரமைப்பு பணிகளுக்கு ஒப்பந்தங்கள் வழங்கப்பட்டுள்ளதாக புகார் எழுந்தது.
இதையடுத்து, ஒப்பந்தங்கள் அளிக்கப்பட்ட சாலைகளை ஆய்வு செய்து அறிக்கை அளிக்க மண்டல துணை ஆணையர்கள், பொறியாளர்களுக்கு சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி உத்தரவிட்டிருந்தார். இதையடுத்து, கடந்த இரண்டு வாரங்களாக ஆய்வு செய்ததில் 660 சாலைகள் தரமாக இருப்பதும் புனரமைப்பு தேவையில்லை என்றும் கூறியுள்ளனர்.
மேலும் தரமான சாலைகளை செப்பனிட முறைகேடாக ஒப்பந்தம் வழங்கப்பட்ட 660 சாலைகளின் ஒப்பந்தங்கள் ரத்து செய்யப்பட்டது. இதில், பெரும் பாலமான சாலைகள் பேருந்துகள் செல்லாத உட்புற சாலைகளாகும். இதனால், ரூ.43 கோடி இழப்புகள் தடுக்கப்பட்டுள்ளது என்று மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி தெரிவித்துள்ளார்.