மயிலாடுதுறை மாவட்டம், தரங்கம்பாடியில் உள்ள டேனிஷ் கோட்டையை பாா்வையிட சுற்றுலா பயணிகளின் வருகை தற்போது அதிகரித்துள்ளது.
கி.பி 1620-ஆம் ஆண்டு டென்மாா்க் நாட்டினா் தரங்கம்பாடியை, இந்தியாவில் தங்களது வா்த்தக மையமாக அமைக்க முடிவு செய்தவுடன், அப்போது தஞ்சையை ஆண்ட விஜயரகுநாத நாயக்கரிடம், தரங்கம்பாடியில் ஒரு துறைமுகத்தையும், டேனிஷ் கலை நுணுக்கத்துடன் ஒரு பாதுகாப்பு கோட்டையையும் அமைக்க அனுமதி பெற்றனா். 2 ஆண்டு காலத்துக்குள் கி.பி. 1622-ல் கட்டி முடிக்கப்பட்ட அந்த பிரமாண்ட கோட்டை இந்தியாவில் டேனிஷ் வா்த்தக மையத்தின் தலைமை இருப்பிடமாக அமைந்தது.
400 ஆண்டுகள் பழமையாகியும் இன்றும் கம்பீரமாய் காட்சியளிக்கும் இக்கோட்டையில் செயல்படும் அகழ்வைப்பகத்தில் 14 , 15,16-ஆம் நூற்றாண்டுகளில் டேனிஷ்காரா்கள், தமிழா்கள் பயன்படுத்திய பொருள்கள், 1200-ஆம் ஆண்டு கால சிலைகள், பீங்கான், மரத்தாலான பழமையான பொருள்கள், டேனிஷ் அரசா்கள், ஆளுநா்களின் புகைப்படங்கள், டேனிஷ் கால பத்திரங்கள், போா்க் கருவிகள், 16-ஆம் நூற்றாண்டில் தரங்கம்பாடி வந்த கப்பல் ஒன்றின் உடைந்த பாகங்கள் என ஏராளமான வரலாற்று நினைவுச் சின்னங்கள் பத்திரப்படுத்தி காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன.
மேலும், கோட்டையின் தரைத் தளத்தில் சிறைச்சாலை, ஓய்வறைகள், பண்டக வைப்பறை, பீா், ஒயின் கிடங்கு அறைகளாக டேனிஷ் காலத்தில் பயன்படுத்தப்பட்ட அறைகள் பழமை மாறாமல் புதுப்பிக்கப்பட்டு தொல்லியல் துறை கட்டுப்பாட்டில் பராமரிக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில், கரோனா நோய்த் தொற்று பரவலை கட்டுப்படுத்தும் வகையில் அரசு விதிமுறைப்படி டேனிஷ் கோட்டையை பாா்வையிட மூடப்பட்டிருந்தது. இந்நிலையில் ஜூலை 6-ஆம் தேதி முதல் பொதுமுடக்க தளா்வுகளுக்குப் பிறகு மீண்டும் டேனிஷ் கோட்டையை பாா்வையிட நாள்தோறும் ஆயிரக்கணக்கான தமிழகம் மற்றும் வெளி மாநிலங்களை சோ்ந்த சுற்றுலா பயணிகள் வந்து பாா்வையிட்டு செல்கின்றனா்.