சீர்காழி அருகே வீட்டில் முடங்கிய ஏழை மாணவர்களுக்காக 2 வது ஆண்டாக கிராமம், கிராமமாக சென்று பாரம்பரிய தற்காப்பு கலைகளை இலவசமாக பயிற்றுவித்து மரபு கலைகளை மீட்டெடுக்கும் இளைஞரின் முயற்சியால் தங்கள் குழந்தைகளின் உடல் திறன் மேம்பட்டுள்ளதாக பெற்றோர் பாராட்டு தெரிவித்துள்ளனர்.
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே புளிச்சாக்காடு கிராமத்தை சேர்ந்தவர் இயற்கை விவசாயியான இளைஞர் தினேஷ்குமார். சிறுவயது முதலே பல்வேறு பாரம்பரிய தற்காப்பு கலைகளை கற்று தேர்ந்தவர். இன்றைய சூழலில் முன்னோடி விவசாயிகளே விவசாயத்தை விட்டு வெளியேறி மாற்று தொழில் செய்து வரும் நிலையில் இளைஞர் தினேஷ்குமார் தற்போதும் இயற்கை விவசாயத்தையே தனது முழு நேர தொழிலாக செய்து வருகிறார்.
கடந்த ஆண்டு தொடங்கிய கரோனா பொதுமுடக்கத்தால் தற்போது வரை மாணவர்கள் வீடுகளிலேயே முடங்கியுள்ளனர். ஆன்லைன் வகுப்பு, செல்போன் விளையாட்டு, தொலைக்காட்சி என மாணவர்களின் உலகம் மாறிவிட்டது.
நகர்புறங்களை சேர்ந்தவர்கள் தங்கள் குழந்தைகளுக்கு பல்வேறு தனித்திறன் பயிற்ச்சியை அளித்து வரும் நிலையில் கிராமபுற ஏழை, எளிய மாணவர்கள் எந்த வசதியும் இன்றி வீடுகளிலேயே முடங்கியுள்ளனர். இந்த விடுமுறையை ஏழை, எளிய மாணவர்களுக்கு பயனுள்ளதாக மாற்ற முடிவு செய்த இளைஞர் தினேஷ்குமார், சீர்காழியை சுற்றியுள்ள கிராமங்களுக்கு சென்று அப்பகுதியில் உள்ள ஏழை சிறுவர்கள் முதல் இளைஞர்கள் வரை ஒன்றிணைத்து கிராமிய தற்காப்பு கலைகளை இலவசமாக பயிற்சியளிக்க முடிவெடுத்தார்.
அதன்படி, இரண்டாவது ஆண்டாக தற்போது வரை அனைவருக்கும் இலவசமாக தற்காப்பு கலையை தொய்வின்றி பயிற்றுவித்து வருகிறார். இதன் மூலம் நமது பாரம்பரிய கலைகள் சிறு கிராமங்கள் வரை இளைய தலைமுறையினரையும் சென்றடையவும் சிறுவர்கள் மனதைரியத்துடன் உடல் வளு பெறவும் நோய் எதிர்ப்பு சக்தியுடன் வாழமுடியும் என நம்பிக்கை தெரிவிக்கிறார் இளைஞர் தினேஷ்குமார்.
10-க்கும் மேற்பட்ட கிராமங்களில் 3 வயது சிறுவர்கள் முதல் 30 வயது இளைஞர்கள் வரை 300 க்கும் மேற்பட்டோர் தற்போது பயிற்சி பெற்று வருகின்றனர். மரபு கலையான சிலம்பத்தில் தொடங்கி நடுகம்பு, நெடுகம்பு, அலங்கார கம்பு, இரட்டைகம்பு, குத்துவரிசை, அருவாள் வீச்சு, வாள்வீச்சு, வேல்கம்பு, பொய்க்கால் குதிரை, சுருள் வாள் வீச்சு என பல்வேறு வீரவிளையாட்டுகள் தற்காப்பு கலைகளை வீடு தேடி சென்று ஏழை மாணவர்களுக்கு இலவசமாக பயிற்றுவிக்கிறார்.
தற்காப்புக்கலை கற்றுக்கொள்ளும் தங்கள் குழந்தைகள் தைரியத்ததுடனும் நல்ல ஆரோக்கியத்துடனும் இருப்பதாக பெருமிதத்துடன் கூறும் பெற்றோர்கள் பயிற்சியளித்த தினேஷ்குமாரின் முயற்சியை பாராட்டி வருகின்றனர்.
முதலில் பயிற்சிக்கு கண்ணாடி அணிந்து வந்த மாணவர்கள் சிலர் தற்போது கண்ணாடி அணியாமல் உடல் ஆரோக்கியத்துடன் இருப்பதாகவும் தெரிவித்த தினேஷ்குமார் அழிந்துவரும் தமிழர் மரபு கலையை மீட்க அந்தந்த பகுதியில் இளைஞர்கள் இம்முயற்சியை எடுக்க வேண்டும் எனவும் தெரிவித்தார்.