0 0
Read Time:4 Minute, 51 Second

கடந்த 2006-ம் ஆண்டு நடந்த சட்டமன்ற தேர்தலின்போது, தி.மு.க. தலைவராக இருந்த மு.கருணாநிதி, தி.மு.க. ஆட்சி அமைந்தால் அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் இலவச வண்ண தொலைக்காட்சி வழங்கப்படும் என தேர்தல் வாக்குறுதியில் அறிவித்தார். இதையடுத்து சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்று தி.மு.க. தலைமையில் ஆட்சி அமைந்ததும், பொதுமக்களுக்கு வண்ண தொலைக்காட்சி பெட்டி வழங்கப்பட்டு வந்தது.

அந்த வகையில் கடலூர் செம்மண்டலம் பகுதியில் வசிக்கும் மக்களுக்கு வழங்குவதற்காக கடந்த 2011-ம் ஆண்டு தொடக்கத்தில் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட இலவச வண்ண தொலைக்காட்சி பெட்டிகள் வந்தன. பின்னர் அவை குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்குவதற்காக, செம்மண்டலத்தில் உள்ள சமுதாய நலக்கூடத்தில் பாதுகாப்பாக வைக்கப்பட்டன.

இதற்கிடையே அந்த தொலைக்காட்சி பெட்டிகள் வினியோகம் செய்யப்படுவதற்கு முன்பாக, 2011-2016-ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலுக்கான தேதி அறிவிக்கப்பட்டு, தேர்தல் நடத்தை விதிகளும் அமலுக்கு வந்தன. இதனால் இலவச தொலைக்காட்சி பெட்டிகளை, பொதுமக்களுக்கு வினியோகம் செய்ய முடியாத நிலை ஏற்பட்டது.இந்தநிலையில் சட்டமன்ற தேர்தலில் தி.மு.க. வெற்றி பெறவில்லை. மாறாக அ.தி.மு.க. தலைமையில் ஆட்சி அமைந்தது. இதனால் அந்த தொலைக்காட்சி பெட்டிகள் குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கப்படாமல், சமுதாய நலக்கூடத்திலேயே முடங்கியது.இதற்கிடையே 2016-2021-ம் ஆண்டுக்கான சட்டமன்ற தேர்தலிலும் அ.தி.மு.க. வெற்றி பெற்றதால், தொலைக்காட்சி பெட்டிகள் தொடர்ந்து அந்த சமுதாய நலக்கூடத்திலேயே வைக்கப்பட்டிருந்தன. மேலும் சமுதாய கூடத்தின் ஜன்னல்கள், கதவுகள் அனைத்தும் திறக்கப்படாத வகையில் தகரத்தால் மூடப்பட்டுள்ளன. இதனால் 2 ஆயிரம் வண்ண தொலைக்காட்சி பெட்டிகளும், சுமார் 10 ஆண்டுகளாக மக்கள் பயன்பாட்டுக்காக கொடுக்கப்படாமல், சமுதாய நலக்கூடத்திலேயே முடங்கி கிடக்கிறது.

இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், இந்த சமுதாய நலக்கூடத்தை சுற்றியுள்ள இப்பகுதியில் வசிக்கும் 150 குடும்பத்தினருக்காக கடந்த 2004-ம் ஆண்டு இந்த சமுதாய நலக்கூடம் கட்டப்பட்டது. அதன்பிறகு 2011-ம் ஆண்டு எங்கள் பகுதியில் வசிப்பவர்களுக்கு வழங்குவதற்காக தி.மு.க. ஆட்சியில் இலவச வண்ண தொலைக்காட்சி பெட்டிகள் கொண்டு வந்து இந்த சமுதாய நலக்கூடத்தில் வைக்கப்பட்டன. அதன்பிறகு ஆட்சி மாற்றம் ஏற்பட்டதால் அந்த தொலைக்காட்சி பெட்டிகள் எங்களுக்கு வழங்கப்படாமல், 10 ஆண்டுகளுக்கும் மேலாக சமுதாய நலக்கூடத்திலேயே கிடந்து வீணாகி வருகிறது. மேலும் சமுதாய நலக்கூட கட்டிடமும் சேதமடைந்து வருகிறது. கடந்த 10 ஆண்டுகளாக சமுதாய நலக்கூட இருட்டறையில் 2 ஆயிரம் வண்ண தொலைக்காட்சி பெட்டிகள் யாருடைய கண்களுக்கும் விருந்தளிக்காமல் வீணாகி வருவதால், தொலைக்காட்சி பெட்டி வழங்காவிட்டாலும், அதனை அகற்றி விட்டு, சேதமடைந்த சமுதாய நலக்கூடத்தை சீரமைத்து பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வரவேண்டும். மேலும், அங்கு கிடக்கும் தொலைக்காட்சி பெட்டிகளில் நல்ல நிலையில் இருப்பதை தேர்ந்தெடுத்து, பள்ளிகள், விடுதிகள் உள்ள அரசு கட்டிடங்களுக்கு பயன்படுத்த வேண்டும் என்றனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %