ஏவுகணை நாயகன் டாக்டர் ஏ. பி. ஜே. அப்துல்கலாமின் நினைவு தினம் இன்று!. டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல்கலாமின் சிந்தனை துளிகள்!.
ஒருமுறை வந்தால் அது கனவு. இருமுறை வந்தால் அது ஆசை. பலமுறை வந்தால் அது லட்சியம்.
நாம் அனைவருக்கும் ஒரே மாதிரி திறமை இல்லாமல் இருக்கலாம் ஆனால் அனைவருக்கும் திறமையை வளர்த்துக்கொள்ள ஒரே மாதிரி வாய்ப்புகள் உள்ளன. வாய்ப்புக்காக காத்திராதே வாய்ப்பை ஏற்படுத்திக்கொள்.
துன்பங்களை சந்திக்கத் தெரிந்தவனுக்கு தோல்வியே இல்லை.
வெல்வோம், சாதிப்போம், வேதனைகளைத் துடைத்தெறிவோம் எந்தை அருளால் எதுவும் வசமாகும்.
நம்பிக்கை நிறைந்த ஒருவர் யார் முன்னேயும் எப்போதுமே மண்டியிடுவது இல்லை.
கனவு காணுங்கள் ஆனால் கனவு என்பது நீ தூக்கத்தில் காண்பது அல்ல, உன்னை தூங்கவிடாமல் செய்வதே.
ஒரு மனுஷன் பிரியும்போது அவன் தாய் அழுதா அவன் ஒரு நல்ல மகன், அவன் பிள்ளை அழுதா அவன் ஒரு நல்ல தகப்பன், அவன் பிரிவுக்காக ஒரு நாடே அழுதா அவன் ஒரு நல்ல தலைவன்.
-டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல் கலாம்
முன்னாள் குடியரசு தலைவரும், ஏவுகணை விஞ்ஞானியுமான ஏ.பி.ஜே. அப்துல் கலாம், உலக புகழ் பெற்ற புண்ணிய தலமான ராமேசுவரத்தில் பிறந்தார். ஏழ்மையான குடும்பத்தில் பிறந்து, இந்தியாவின் பாதுகாப்பு துறையில் பணியாற்றி அணுகுண்டு சோதனை, செயற்கைகோள் வடிவமைத்தல், அக்னி ஏவுகணை உருவாக்குவதில் பங்கேற்று இந்தியாவிற்கு பெருமை சேர்த்தவர்.
2015-ம் ஆண்டு ஜூலை 27-ம் தேதி மேகாலயா மாநிலத் தலைநகர் ஷில்லாங்கில் மாணவர்களுடன் உரையாடும்போது அப்துல்கலாமுக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டு உயிரிழந்தார்.
அவரது உடல் ராமேசுவரத்தில் உள்ள வீட்டுக்கு கொண்டுவரப்பட்டு, இளைஞர்களும் மாணவர்களும் உள்பட லட்சக்கணக்கானோர் அஞ்சலி செலுத்தினர்.
பின்னர் அவரது உடல் ராமேசுவரம் அருகே உள்ள தங்கச்சிமடம் ஊராட்சிக்கு உட்பட்ட பேய்க்கரும்பு என்ற இடத்தில் அடக்கம் செய்யப்பட்டது.
அவரது நினைவைப் போற்றும் வகையில், மத்திய அரசு பல கோடி ரூபாய் செலவில் மணிமண்டபம் அமைத்தது. அந்த நினைவிடத்தில் அப்துல்கலாமின் வாழ்க்கை வரலாறு குறித்து வாசகங்கள் அமைக்கப்பட்டும், அவர் பயன்படுத்திய உடைமைகளும் வைக்கப்பட்டு உள்ளன.
இன்று அப்துல் கலாமின் 6-ம் ஆண்டு நினைவு தினம் ஆகும். இதையொட்டி ராமேசுவரம் மணிமண்டபத்தில் நினைவு தினம் அனுசரிக்கப்படுகிறது. மணிமண்டபத்தின் வெளிப்பகுதி மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளது.