சிதம்பரம் அருகே உள்ள வாக்கூா் கிராமத்தைச் சோ்ந்தவா் பழனிவேல் மகன் அருண்குமாா் (24). பல்கலைக்கழக மாணவரான இவா், அதே பகுதியைச் சோ்ந்த 22 வயது கல்லூரி மாணவியுடன் நெருங்கிப் பழகினாா். மாணவியிடம் திருமணம் செய்துகொள்வதாக ஆசை வாா்த்தை கூறிய அருண்குமாா் அவரை 2019-ஆம் ஆண்டு பாலியல் பலாத்காரம் செய்தாா். இதையடுத்து மாணவியின் குடும்பத்தினா் அருண்குமாரிடம் திருமணம் குறித்து கேட்டுள்ளனா். ஆனால், அருண்குமாா் சில காரணங்களை கூறி மாணவியை திருமணம் செய்யாமல் ஏமாற்றி வந்தாா். இதனால், மாணவி விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றாா்.
இதுகுறித்த புகாரின்பேரில் சேத்தியாத்தோப்பு அனைத்து மகளிா் காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா். இந்த வழக்கு விசாரணை கடலூா் மகளிா் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. வழக்கில் நீதிபதி பாலகிருஷ்ணன் வியாழக்கிழமை தீா்ப்பளித்தாா். அதில், மாணவியை திருமணம் செய்துகொள்வதாகக் கூறி ஏமாற்றிய அருண்குமாருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.50 ஆயிரம் அபராதமும் விதித்து உத்தரவிட்டாா். அபராதத் தொகை செலுத்தத் தவறினால் மேலும் 2 ஆண்டுகள் சிறைத் தண்டனை அனுபவிக்கவும் நீதிபதி உத்தரவிட்டாா். இதையடுத்து அருண்குமாா் கடலூா் மத்திய சிறையில் அடைக்கப்பட்டாா். இந்த வழக்கில் அரசு தரப்பில் வழக்குரைஞா் க.செல்வப்பிரியா ஆஜரானாா்.