மயிலாடுதுறை அருகே வாய்க்கால் ஆக்ரமிப்புகளை அகற்றி தூர்வாரிய பொதுப்பணித்துறையினர் அடைக்கப்பட்ட ஆற்றை திறக்காததால் ஆற்றின் கரை உடைந்து 100க்கும் மேற்பட்ட வீடுகளை தண்ணீர் சூழ்ந்தது.
மயிலாடுதுறை அருகே மாப்படுகை நாராயணபுரத்தில் 20 வருடங்களுக்கு முன்னர் தனியார் ஒருவர் கோவில் இடத்தில் என்ற பெயரில் முத்தப்பன்காவிரி செல்லும் பாதைதூர்த்து குறுக்கே மண்சாலை அமைத்து நகரை உருவாக்கி கோயில் இடத்தை நிர்வாகத்திடமும் அனுமதி வாங்காமல் இந்து அறநிலையத்துறையினரிடமும் அனுமதி வாங்காமல் மனை பிரிவிற்கும் அனுமதி வாங்காமல் மனைகளை விற்பனை செய்துள்ளார்.
350 பேர் மனைகளை வாங்கி வீடுகட்டி குடியிருந்து வருகின்றனர். இந்நிலையில் முத்தப்பன்காவிரி ஆறு கடந்த 2 மாதங்களுக்கு முன்னர் முதலமைச்சரின் சிறப்பு தூர்வாரும் நிதி திட்டத்தின்கீழ் பொதுப்பணித்துறை அதிகாரிகள் ஆக்ரமிப்புகளை அகற்றி தூர்வாரினர். ஆனால் பொதுப்பணித்துறையினர் ஆற்றின் குறுக்கே அமைக்கப்பட்டிருந்த அடைப்பையும் அகற்றவில்லை, பாலமும் கட்டித்தரவில்லை. இந்நிலையில் காவிரி ஆற்றில் இருந்து முத்தப்பன் காவிரிக்கு தண்ணீர் திறந்துவிடப்பட்டது. நாராயணபுரத்தில் ஆற்றை தூர்த்து குறுக்கே உள்ள சாலையால் தண்ணீர் செல்ல வழியின்றி அபயாம்பாள்புரத்தில் ஆற்றின் கரை உடைப்பு ஏற்பட்டது.
இதனால் 100க்கும் மேற்பட்ட வீடுகளை தண்ணீர் சூழ்ந்தது. ஆற்றில் அமைக்கப்ட்ட சாலையின் ஒருபுறத்தில் தண்ணீர் தேங்கி நிற்கிறது. மற்றொருபுறம் வாய்கால் வறண்டு தரிசாக கிடக்கிறது. பொதுப்பணித்துறையினர் நடவடிக்கை எடுக்கவில்லை உடனடியாக மாவட்ட நிர்வாகம் இந்தப்பகுதியை பார்வையிட்டு வரும் மழை காலத்திற்குள் நல்ல முடிவு எடுக்க வேண்டும் என்று பாதிக்கப்பட்ட மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.