சீர்காழி அருகே தீவிபத்தில் கூரை வீடு எரிந்து நாசமானது. இதில் பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு பன்னீர்செல்வம் எம்.எல்.ஏ. நிவாரண உதவி வழங்கினார்.
சீர்காழி அருகே திட்டை ஊராட்சிக்கு உட்பட்ட புளியந்தோப்பு கிராமத்தை சேர்ந்த கணேசன் மகன் விஜயராஜ் (வயது 36). கூலித்தொழிலாளியான இவர், நேற்று முந்தினம் இரவு தனது கூரை வீட்டில் மனைவி கீதா மற்றும் இரு பெண் குழந்தைகளுடன் தூங்கி கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராமல் கூரை வீடு திடீரென தீப்பிடித்து எரிந்தது. அப்போது வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தவர்கள் அலறியடித்து வீட்டைவிட்டு வெளியே ஓடினர்.
இந்த தீ விபத்தில் வீடு மற்றும் வீட்டில் இருந்த பொருட்கள் முழுவதும் எரிந்து நாசமானது. இதுகுறித்து தகவல் அறிந்த சீர்காழி தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு நேரில் வந்து தீ மேலும் பரவாமல் போராடி தீயை அணைத்தனர். இந்த தீ விபத்தால் புளியந்தோப்பு கிராமத்தில் இரவு முழுவதும் மின்சாரம் துண்டிக்கப்பட்டது.இதுகுறித்து தகவல் அறிந்த சீர்காழி பன்னீர்செல்வம் எம்.எல்.ஏ. சம்பவ இடத்திற்கு நேரில் சென்று பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு தி.மு.க. சார்பில் ரூ.5 ஆயிரம் அரிசி, வேட்டி, சேலை, காய்கறி, மளிகை பொருட்கள் உள்ளிட்ட நிவாரண உதவிகளை வழங்கினார். மேலும் தீ விபத்தில் பாதிக்கப்பட்ட விஜயராஜிக்கு அரசு சார்பில் முன்னுரிமை அடிப்படையில் தொகுப்பு வீடுகள் வழங்கப்படும் என உறுதி அளித்தார். இதில் கொள்ளிடம் ஒன்றியக்குழு தலைவர் ஜெயப்பிரகாஷ், தி.மு.க. ஒன்றிய செயலாளர் பிரபாகரன், மாவட்ட கவுன்சிலர் விஜயேஸ்வரன், ஊராட்சி மன்ற தலைவர் பெரியசாமி உள்பட பலர் உடனிருந்தனர்.
இதேபோல் அரசு சார்பில் வருவாய் ஆய்வாளர் பொன்னிவளவன் ரூ.5 ஆயிரம், அரிசி, வேட்டி, சேலை, மண்எண்ணெய் உள்ளிட்ட நிவாரண பொருட்களை பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு வழங்கினார்.நிகழ்ச்சியில் ஒன்றிய கவுன்சிலர் விஜயகுமார், ஊராட்சி மன்ற துணை தலைவர் விஜயராணி, ஊராட்சி செயலர் அன்பரசன் உள்பட பலர் உடனிருந்தனர்.