0 0
Read Time:3 Minute, 41 Second

சிதம்பரம் அருகே பரங்கிப்பேட்டை பேரூராட்சி உள்ளது. இந்த ஊர் ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் முக்கிய கப்பல்துறைமுகமாக விளங்கியுள்ளது. ஆசியாவின் முதல் இரும்பு தொழிற்சாலையும் இங்குதான் நிறுவப்பட்டது. கி.பி. 1781ல் ஆங்கிலேயரை எதிர்த்து ஹைதர் அலி இரண்டாம் மைசூர் போர் புரிந்தார். அதன் நினைவு போர்க்கொடி கம்பமும், கல்லறைகளும் இன்றும் அழியாச் சின்னங்களாக உள்ளன. பாபா கோயிலும், அண்ணாமலை பல்கலைக்கழகத்தினால் நிறுவப்பட்ட கடல் வாழ் உயராய்வு மையமும் இங்கு உள்ளது. இதிலுள்ள கடல்சார் அருங்காட்சியகம் பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு  பயனுள்ளதாக உள்ளது.

அதேபோல, பரங்கிப்பேட்டை அன்னங்கோயில் மீன்பிடி இறங்குதளத்தில் பிடிக்கப்படும் மீன்கள் அண்டை மாநிலங்களுக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றன. இப்படி பெருமை வாய்ந்த பரங்கிப்பேட்டையில் பேரூராட்சி சார்பில் ரூ 60 லட்சம் மதிப்பில் பரங்கிப்பேட்டை நீர் விளையாட்டு வளாகம் அமைக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்த பணிகள் கடந்த 2 மாதத்திற்கு மேலாக நடைபெற்று வந்த நிலையில் 80 சதவீத பணிகள் முடிவுற்றுள்ளது. மீதமுள்ள 20 சதவீத பணிகள் இன்னும் 15 தினங்களில் முடிவு பெறும் எனவும் கூறப்படுகிறது. இந்த நீர் விளையாட்டு வளாகத்தில் படகு குழாம், சிறுவர் பூங்கா, மிதவை பாலம் உள்ளிட்டவை அமைக்கப்பட உள்ளது. சிதம்பரம், பரங்கிப்பேட்டை பகுதியில் உள்ள பொதுமக்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் மட்டுமில்லாமல் வெளி மாவட்டங்களிலிருந்து வரும் சுற்றுலாப் பயணிகளைக் கவரும் விதமாக படகு குழாமில் சுற்றுலாப் பயணிகளுக்குத் தேவையான அனைத்து அடிப்படை வசதிகளும் அமைக்கப்பட்டு வருகின்றன.

இதுகுறித்து பரங்கிப்பேட்டை பேரூராட்சி செயல் அலுவலர்  சீனிவாசன் கூறுகையில், “சிதம்பரம் சார் ஆட்சியர் மதுபாலன் முயற்சியின் பேரில் பரங்கிப்பேட்டை நீர் விளையாட்டு வளாகம் பணிகள் நடைபெற்று வருகிறது. இது உள்ளூர் மக்கள் மட்டுமில்லாமல் வெளிமாவட்ட மற்றும் வெளிமாநில பொதுமக்கள் மற்றும் சுற்றுலாப்பயணிகளை ஈர்க்கும் விதத்தில் அனைத்து அடிப்படை வசதிகளும் அமைக்கப்பட்டு வருகிறது. இதனை இந்த பகுதியில் உள்ள பொதுமக்கள் நல்ல முறையில் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். விரைவில் இதனைச் செயல்பாட்டுக்குக் கொண்டுவரும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்த வளாகம் செயல்பாட்டுக்கு வந்தால் இப்பகுதி மேம்படும்” என்றார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %