ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் கடந்த ஜூலை 23-ஆம் தேதி தொடங்கிய 32-ஆவது ஒலிம்பிக் போட்டிகள் வரும் ஆகஸ்ட் 8-ஆம் தேதியுடன் நிறைவடைகிறது. உலகில் உள்ள 206 நாடுகளைச் சேர்ந்த 11,300 போட்டியாளர்கள் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்றுள்ளனர்.
கொரோனா பரவல் அதிகரிக்கும் என்பதால் ஜப்பானில் வாழும் பெரும்பாலான மக்கள் ஒலிம்பிக் போட்டிகளை நடத்த எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் அந்நாட்டில் அவசர நிலை பிறப்பிக்கப்பட்டு, போட்டி நடைபெறும் இடங்களில் பார்வையாளர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆனாலும் போட்டிகளை நடத்த மக்கள் எதிர்ப்பு தெரிவித்தே வருகின்றனர்.
இப்படி ஒலிம்பிக் போட்டிகளே அங்குள்ள மக்களின் எதிர்ப்பை சமாளித்து தான் நடந்து வருகிறது.
எந்தவொரு செயலும் கட்டாயமாக்கப்படும் போது, வலிய திணிக்கப்படும் போது, விதிகளுக்குப் புறம்பாக நடந்து கொள்ளும்போது, அடக்கி ஒடுக்க நினைக்கும் போது தன்னெழுச்சியாக எதிர்ப்பு நிலை உருவாகிவிடுகிறது. உலகம் முழுவதும் இதற்கு ஆயிரக்கணக்கான உதாரணங்களை காண முடியும். அரசியல் ,இனவெறி, மதம், பாலின பாகுபாடு, சமத்துவமின்மை, போர், மனித உரிமை மீறல்கள் , வறுமை, பாலியல் சுதந்திரம் என ஒவ்வொரு நாட்டிலும் நிலவும் பல்வேறு வகையான பிரச்னைகளுக்கு எதிராக மக்கள் தொடர்ந்து போராடி வருகின்றனர்.
இத்தகைய எதிர்ப்பு நிலையை அல்லது போராட்டத்தை உலகுக்கு வெளிச்சம் போட்டு காட்ட உலக அளவிலான விளையாட்டுப் போட்டிகள் களமாகி வருகின்றன. நூறாண்டுகளுக்கு மேலாக ஒலிம்பிக் போட்டிகளும் அரசியல் மற்றும் மனித உரிமை மீறல் சார்ந்த பிரச்னைகளுக்கு எதிரான எதிர்ப்பை பதிவு செய்யும் களமாகவே இருந்து வருகிறது.
கடந்த 1906-ஆம் ஆண்டு இங்கிலாந்து நாட்டின் சார்பில் தடகள வீரராக பங்கேற்றவர் பீட்டர் ஓ கார்னர். அயர்லாந்து தனிநாடு கோரிக்கையை வலியுறுத்தி, வெற்றிக்குப்பின் இங்கிலாந்து நாட்டின் கொடிக்குப் பதிலாக அயர்லாந்து நாட்டு தேசிய கொடியை ஏந்தி இங்கிலாந்துக்கு எதிரான தனது எதிர்ப்பை பதிவு செய்தார்.
அதே போன்று அமெரிக்காவில் கறுப்பின மக்களுக்கு எதிரான பிரச்னை உச்சத்தில் இருந்த சமயத்தில், கடந்த 1968-ஆம் ஆண்டு மெக்சிகோவில் நடந்த ஒலிம்பிக் போட்டியில் 200 மீட்டர் ஓட்டத்தில் தங்கம், வெண்கலப் பதக்கங்களை வென்ற அமெரிக்க கறுப்பின வீரர்களான டாமி ஸ்மித், ஜான் கார்லோஸ் ஆகியோர் பதக்க மேடையில் நின்ற போது கைகளை மடக்கி மேலே நீட்டி இனவெறிக்கு எதிரான தங்களது எதிர்ப்பைப் பதிவு செய்தனர்.
டோக்கியோவில் நடைபெற்று வரும் ஒலிம்பிக் போட்டிகளும் இதற்கு விதிவிலக்கல்ல. இஸ்ரேல் பாலஸ்தீனத்துக்கு இடையிலான பிரச்னை உலகறிந்ததே. டோக்கியோ ஒலிம்பிக்கில் இஸ்ரேல் வீரருடனான போட்டியில் கலந்து கொள்ள மறுப்பு தெரிவித்து அல்ஜீரிய நாட்டைச் சேர்ந்த ஜூடோ வீரர் பெஃதி நூரின் (Fethi Nourine) நாடு திரும்பினார். பாலஸ்தீனத்துக்கு ஆதரவு தெரிவித்து இந்த முடிவை எடுத்ததாக அவர் அறிவித்துள்ளார். இதே இஸ்ரேலிய வீரருடன் கடந்த 2019-ஆம் ஆண்டு நடந்த உலக ஜூடோ சாம்பியன்ஷிப் போட்டியிலும் பெஃதி நூரின் கலந்து கொள்ளவில்லை.
இதே போல 25 வயதான அமெரிக்க குண்டெறிதல் வீராங்கனை ரேவன் சாண்டர்ஸ் பதக்க மேடையில்,கறுப்பின உரிமை, ஓரினச் சேர்க்கை , மன நலச் சிக்கல் ஆகியவற்றுக்கு ஆதரவு தெரிவிக்கு தெரிவிக்கும் வகையில் தனது கைகளை எக்ஸ் வடிவில் வைத்து தனது எதிர்ப்பை பதிவு செய்தார். ஆனால் சர்வதேச ஒலிம்பிக் சங்கம்,
பதக்கங்களைப் பெறுவதற்கான மேடையில் எந்த வகையான போராட்டம் நடத்துவதையும், குறியீடுகளைக் காட்டுவதையும், முழக்கம் எழுப்புவதையும் அனுமதிப்பது இல்லை. ஆனால் தங்களது பதக்கங்களே பறிபோனாலும் கூட தங்கள் தரப்பு நியாயத்தை, உரிமைகளை, தனி மனித மாண்பை உலகுக்கு எடுத்துக் காட்ட வீரர்கள் தயங்குவதே இல்லை.
இப்படி உலகம் முழுவதும் எதிர்ப்பு அரசியல், குறியீட்டியம் எனும் பெயரில் அடக்குமுறைகளுக்கு எதிரான போராட்டங்கள் தொடர்ந்தே வருகின்றன.