ராமநத்தம் அருகே தேசிய நெடுஞ்சாலையில் லாரி ஓட்டுனரை கத்தியை காட்டி மிரட்டி 93 ஆயிரம் பணத்தை பறித்துச் சென்ற 16 வயது சிறுமி உட்பட 4 பேர் கைது செய்யப்பட்டனர்.
திருவண்ணாமலை மாவட்டம் மங்களம் கிராமத்தைச் சேர்ந்த அண்ணாமலை (46) என்பவர் செங்கத்தில் இருந்து செங்கல்களை ஏற்றிக்கொண்டு திருவாரூர் சென்றுள்ளார். பினனர், செங்கல்களை இறக்கி விட்டு அதற்கு உரிய தொகையான 93 ஆயிரம் பணத்தை வாங்கிக்கொண்டு திருவண்ணாமலைக்கு திரும்பியுள்ளார். அப்போது கடலூர் மாவட்டம் ராமநத்தம் பகுதியில் திருச்சி – சென்னை தேசிய நெடுஞ்சாலையில் உள்ள லக்கூர் அருகே வந்து கொண்டிருந்தபோது, சாலையோரம் நின்று சிறுமி ஒருவர் கையை காட்டி லாரியை நிறுத்தியுள்ளார்.
அண்ணாமலை லாரியை விட்டு இறங்கியதும் மறைந்திருந்த 3 பேர் அண்ணாமலையின் கழுத்தில் கத்தியை வைத்து 93 ஆயிரம் பணத்தையும், செல்போனையும் எடுத்துக் கொண்டு தப்பிச் சென்றுள்ளனர். இதுகுறித்து லாரி ஓட்டுனர் அண்ணாமலை ராமநத்தம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார்.

புகாரின் பேரில் ராமநத்தம் போலீசார் வழக்குப்பதிவு செய்து ராமநத்தம் தேசிய நெடுஞ்சாலையில் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது பைக்கில் வந்தவர்கள் போலீசாரை கண்டவுடன் அங்கிருந்து தப்பிச் செல்ல முயன்றனர். உடனே ராமநத்தம் போலீசார் அவர்களை பிடித்து காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை செய்தனர்.

விசாரணையில் ராமநத்தத்தை அடுத்துள்ள ஆ.பாளையம் கிராமத்தைச் சேர்ந்த இளையராஜா (35) ஆதேஷ் (27) கோழியூர் கிராமத்தைச் சேர்ந்த பூமிநாதன் (27) மற்றும் திட்டக்குடியைச் சேர்ந்த 16 வயது சிறுமி உட்பட நான்கு பேரும், லக்கூர் அருகே லாரியை மறித்து பணத்தை திருடியதை ஒப்புக்கொண்டனர். இதையடுத்து அவர்களிடமிருந்து 26 ஆயிரம் பணம் செல்போன் மற்றும் இருசக்கர வாகனத்தையும் பறிமுதல் செய்தனர்.