சீர்காழியில் காரில் கடத்தி வரப்பட்ட 1250 சாராய பாக்கெட்டுகளை போலீசார் பறிமுதல் செய்து, 2 பேரை கைது செய்தனர்.
சீர்காழி அருகே கோவில்பத்து சாலையில் தனிப்படை போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது சீர்காழியில் இருந்து கோவில்பத்து நோக்கி வந்த ஒரு காரை வழிமறித்து சோதனை செய்தனர். அப்போது அந்த காரில் 6 சாக்கு மூட்டைகளில் 1,250 பாண்டி சாராய பாக்கெட்டுகள் இருப்பது தெரிய வந்தது.
இதையடுத்து தனிப்படை போலீசார் சாராயத்தை பறிமுதல் செய்து, கார் டிரைவர் உள்பட2 பேரிடம் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் பாலையூர் செல்லும் சுனாமி குடியிருப்பு பகுதியை சேர்ந்த கார் டிரைவர் தமிழ் (வயது 39) என்பதும், உடன் வந்தவர் திருத்துறைப்பூண்டி இடும்பவனம் மங்கலநாயகபுரம் பகுதியை சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி மகன் சூரியமூர்த்தி (29) என்பதும், இவர்கள் 2 பேரும் சாராய பாக்கெட்டுகளை காரைக்காலில் இருந்து காரில் கடத்தி வந்ததும் தெரியவந்தது.
இதையடுத்து தனிப்படை போலீசார், காரில் சாராயம் கடத்தி வந்த டிரைவர் தமிழ் மற்றும் சூரியமூர்த்தி ஆகியோரையும், பறிமுதல் செய்த 1,250 சாராய பாக்ெகட்டுகள், கார் ஆகியவற்றை சீர்காழி போலீசில் ஒப்படைத்தனர்.இதுகுறித்து சீர்காழி போலீசார் வழக்குப்பதிவு செய்து, கார் டிரைவர் தமிழ் உள்பட 2 பேரை கைது செய்து, சாராய பாக்கெட்டுகள் யாருக்காக கடத்தி வரப்பட்டது என்பது குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள். பறிமுதல் செய்யப்பட்ட கார், சாராய பாக்கெட்டுகள் ஆகியவற்றின் மதிப்பு ரூ.3 லட்சம் என கூறப்படுகிறது.