2021 – 2022ஆம் ஆண்டிற்கான முழு நிதிநிலை அறிக்கை சட்டமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆட்சியின் முதல் பட்ஜெட் இதுவாகும். எலக்ட்ரானிக் வடிவிலான முதல் நிதிநிலை அறிக்கை என்பதால் எம்.எல்.ஏக்கள் கம்பியூட்டர் திரையில் காணும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. எம்.எல்.ஏக்களுக்கு வழங்கப்பட்டுள்ள டேப்லெட் கருவி மூலம் பட்ஜெட் தொகுப்பை பார்க்கும் வண்ணம் ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது. நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்வதற்கு முன்பாக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன், முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் சந்தித்து வாழ்த்து பெற்றார்.
தமிழக நிதியமைச்சர் பட்ஜெட்டை வாசிக்கத் தொடங்கியதும். அதிமுக உறுப்பினர்கள் பேச அனுமதி கேட்டு எழுந்து நின்று பேரவையில் அமளின் ஈடுபட்டனர். எதிர்க்கட்சி உறுப்பினர்களை அமைதி காக்க சபாநாயகர் அறிவுறுத்தியும் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டனர். இருப்பினும் தன் கையில் வைத்திருந்த குறிப்பை தொடர்ந்து வாசித்த எதிர்க்கட்சித் தலைவர் வெளிநடப்பு செய்வதாக அறிவித்து அதிமுகவினர் அனைவரும் வெளியேறினர்.அதன்பின்னர் அதிமுக உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.
நிதியமைச்சர் பேசுகையில் ,” அடுத்த ஆறு மாதங்களுக்குப் பின் தாக்கல் செய்யவுள்ள 2022-2023-ம் ஆண்டிற்கான முழு வரவு செலவுத் திட்டத்திற்கு வலுவான அடித்தளம் அமைப்பதே, இந்த திருத்த வரவு செலவுத் திட்டத்தின் முதன்மை நோக்கமாகும். ஒரே ஆண்டில் செய்து முடிக்க இயலாத அளவிற்கு இப்பணி மிகக் கடினமாக உள்ளது. இதற்கு குறைந்தபட்சம் 2 – 3 ஆண்டுகள் வரையிலும் முயற்சிகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட வேண்டும். எந்த சிக்கலையும் சரி செய்வதற்கான முதல் படி அதை அடையாளம் கண்டு அதன் ஆழத்தினை புரிந்து கொள்வதாகும்.தேர்தல் வாக்குறுதிகளை படிப்படியாக நிறைவேற்றுவோம்’ என்றார்.