மயிலாடுதுறை : மயிலாடுதுறையில் நேற்று முன்தினம் மாலையில் ஒரு மணி நேரத்திற்கு கன மழை பெய்தது. மயிலாடுதுறையில் 36 மி.மீ. மற்றும் மணல்மேடு பகுதியில் 55 மி.மீ மழையும் பெய்தது. மயிலாடுதுறை, குத்தாலம் மற்றும் தரங்கம்பாடி பகுதிகளில் நிலத்தடி நீரைக்கொண்டு விவசாயம் செய்து வருகின்றனர். ஆடுதுறை 45 என்ற சன்னரக நெல் அதிக அளவில் பயிர் செய்யப்பட்டுள்ளது. பல்வேறு இடங்களில் அறுவடை செய்துள்ளனர்.
தற்போது குறுவை அறுவடை தீவிரமாகி வருகிறது. திடீர் மழையால் அறுவடைக்குத் தயாராக இருந்த நெற் பயிர் மழையின் தாக்கத்தாலும், பலத்த காற்று வீசியதாலும் வயலில் சாய்ந்துவிட்டது. உடனடியாக வயலில் இருந்த தண்ணீரை விவசாயிகள் வடியவிட்டனர்.ஆத்தூர் பகுதியில் பல்வேறு இடங்களில் காற்றுடன் கனமழை பெய்ததால் நெற்பயிர்கள் வயலில் சாய்ந்து கிடக்கிறது. மழை தொடராமல் இத்துடன் விட்டுவிட்டால் ஒரளவிற்கு வயலில் சாய்ந்துள்ள நெற்பயிரைக் காப்பாற்றிவிடலாம், தொடர்ந்து மழை பெய்தால் சாய்ந்துள்ள நெற்பயிர்கள் மழைநீரில் மூழ்கி சேதத்தை ஏற்படுத்த வாய்ப்புள்ளது என விவசாயிகள் தெரிவித்தனர்.