கடலூர் மாவட்ட கலெக்டரின் உத்தரவின் பேரில், மாவட்ட உணவு பாதுகாப்பு துறையின் சார்பில் மாவட்ட நியமன அலுவலர் டாக்டர் கைலாஷ் குமார் தலைமையில் உணவு பாதுகாப்பு அதிகாரிகள் நல்லதம்பி, சுந்தரமூர்த்தி, சுப்பிரமணியன் ஆகியோரை கொண்ட குழுவினர் குள்ளஞ்சாவடி பகுதியில் ஆலப்பாக்கம் ரோட்டில் உள்ள மளிகைக் கடைகள் மற்றும் பெட்டிக்கடைகளில் நேற்று ஆய்வு பணி மேற்கொண்டனர். அப்போது அங்குள்ள ஒரு கடையில் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து சுமார் 2 கிலோ எடை கொண்ட புகையிலை பொருட்களை பறிமுதல் செய்த அதிகாரிகள், கடை உரிமையாளருக்கு ரூ.5 ஆயிரம் அபராதம் விதித்தனர்.
இதேபோல் அந்த பகுதியில் இருந்த 3 கடைகளில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் இருந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து கடை உரிமையாளர்களுக்கு எச்சரிக்கை நோட்டீஸ் விடுத்த அதிகாரிகள், கடைகளில் இருந்த சுமார் 100 கிலோ பிளாஸ்டிக் பொருட்களை பறிமுதல் செய்தனர். இதுகுறித்து மாவட்ட நியமன அலுவலர் கைலாஷ்குமார் கூறுகையில், தமிழக அரசால் தடை செய்யப்பட்டுள்ள பான்மசாலா, குட்கா போன்ற பொருட்கள் விற்பனை செய்வது கண்டறியப்பட்டால் சம்பந்தப்பட்ட கடை உரிமையாளர்களுக்கு அபராதம் விதிக்கப்படுவதுடன், கடைகளுக்கு சீல் வைக்கப்படும் என்றார்.