கருவேப்பிலங்குறிச்சி அருகே நேரடி நெல் கொள்முதல் நிலையத்தை திறக்க வலியுறுத்தி விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கருவேப்பிலங்குறிச்சி அருகே டி.வி.புத்தூர் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் குறுவை அறுவடை பணிகள் நடந்து வருகிறது. இதனால் விவசாயிகள் தாங்கள் அறுவடை செய்த நெல் மூட்டைகளை, அப்பகுதியில் செயல்படாமல் உள்ள நேரடி நெல் கொள்முதல் நிலையத்துக்கு கொண்டு வந்து குவித்து வைத்துள்ளனர். இதுவரை சுமார் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் தேக்கம் அடைந்துள்ளன.
இதனால் நேரடி நெல் கொள்முதல் நிலையத்தை உடனடியாக திறந்து, நெல்லை கொள்முதல் செய்ய வேண்டும் என விவசாயிகள் பலமுறை மனுக்கள் அளித்தும், இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால் அங்கு குவித்து வைத்துள்ள நெல் குவியல்கள் மழையால் பாதிக்கப்பட்டு தரமற்ற நெல்லாக மாறி வருகிறது.
இந்த நிலையில் அந்த நேரடி நெல் கொள்முதல் நிலையத்தை திறப்பதற்காக நேற்று அலுவலர் ஒருவர் வந்தார். அப்போது எடை போடும் நேரத்தில், தி.மு.க. பிரமுகர் ஒருவர் செல்போன் மூலம் அந்த அலுவலரை தொடர்பு கொண்டு நேரடி நெல் கொள்முதல் நிலையத்தை திறக்க வேண்டாம் என கூறியதாக தெரிகிறது. இதனை அந்த அலுவலர், விவசாயிகளிடம் தெரிவித்தார்.இதனால் ஆத்திரமடைந்த விவசாயிகள், நேரடி நெல் கொள்முதல் நிலையத்தை திறக்க வேண்டாம் எனத் தடுத்த தி.மு.க. பிரமுகரை கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து முளைத்த நெல்லை எடுத்துக்கொண்டு மறியலில் ஈடுபடுவதற்காக விருத்தாசலம் ஜெயங்கொண்டம் சாலைக்கு திரண்டு சென்றனர். இதுகுறித்து அறிந்து விருத்தாசலம் துணை போலீஸ் சூப்பிரண்டு மோகன் தலைமையிலான போலீசார் விரைந்து வந்து மறியலில் ஈடுபட முயன்ற விவசாயிகளை தடுத்து நிறுத்தி, பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காணலாம் என கூறி சமாதானப்படுத்தினர்.இதற்கிடையே அங்கு வந்த தி.மு.க. ஒன்றிய செயலாளர் வேல்முருகன், நேரடி நெல் கொள்முதல் நிலையத்தை திறந்து வைத்தார். இதனால் விவசாயிகள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.
இதேபோல கருவேப்பிலங்குறிச்சி அடுத்த கொளத்தங்குறிச்சி கிராமத்திலும் நேரடி நெல் கொள்முதல் நிலையத்தை திறக்க வலியுறுத்தி விவசாயிகள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுபற்றி அறிந்து வந்த கருவேப்பிலங்குறிச்சி போலீசார், போராட்டத்தில் ஈடுபட்டவர்களை சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. கருவேப்பிலங்குறிச்சி பகுதியில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களை திறக்க கோரி அடுத்தடுத்து விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.