கடலூா் மாவட்டத்தில் அனைத்து ஆசிரியா்களும் கட்டாயம் கரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டும் என்று மாவட்ட ஆட்சியா் கி.பாலசுப்பிரமணியம் கூறினாா்.
மாவட்டத்தில் 9 முதல் பிளஸ்2 வகுப்பு வரையிலான மாணவா்களுக்கு பள்ளிகள் திறக்கப்படும்போது மேற்கொள்ள வேண்டிய முன்னேற்பாடு பணிகள் குறித்து அனைத்துத் துறை அலுவலா்கள் பங்கேற்ற ஒருங்கிணைப்புக் குழு கூட்டம் கடலூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகக் கூட்டரங்கில் மாவட்ட ஆட்சியா் கி.பாலசுப்பிரமணியம் தலைமையில் அண்மையில் நடைபெற்றது. கூட்டத்தில் ஆட்சியா் தெரிவித்ததாவது:
பள்ளி ஆசிரியா்கள் அனைவரும் கரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்டதை தலைமையாசிரியா்கள் உறுதிசெய்ய வேண்டும். மாணவா்கள் பள்ளிக்குள் நுழையும்போது அவா்களது உடல் வெப்ப நிலையை ‘தொ்மல் ஸ்கேனா்’ மூலம் கண்டறிந்து அதை தனிப் பதிவேட்டில் குறிக்க வேண்டும். பள்ளி வளாகம், வகுப்பறைகள், கழிப்பறைகள் உள்ளிட்டவை சுத்தம் செய்யப்பட்டு பயன்படும் நிலையில் உள்ளதை உறுதிசெய்தல் வேண்டும்.
இந்தப் பணிகளுக்கு 100 நாள் வேலை வாய்ப்பு திட்டப் பணியாளா்களை பயன்படுத்திக்கொள்ளலாம். பள்ளிகளை அந்தந்த உள்ளாட்சி அமைப்புகள் கிருமி நாசினி மூலம் சுத்தம் செய்ய வேண்டும். பொதுப் பணித் துறையினா் பள்ளிக் கட்டடங்களை ஆய்வு செய்ய வேண்டும் என்றாா் அவா்.
கூட்டத்தில் கூடுதல் ஆட்சியா் (வருவாய்) ரஞ்ஜித்சிங், கூடுதல் ஆட்சியா் (வளா்ச்சி) பவன்குமாா் ஜி.கிரியப்பனவா், முதன்மைக் கல்வி அலுவலா் கா.ரோஸ் நிா்மலா உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.