கடலூர் மாவட்டம் பண்ருட்டி நகராட்சியில், குப்பைகளை சேகரிப்பதற்காக, வாங்கப்பட்ட வாகனங்கள் மக்கி வருவதால், நகராட்சி நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரிக்கை எழுந்துள்ளது.
பண்ருட்டி நகராட்சியின் பின்புறத்தில், வாகனங்கள் மண்ணில் புதைந்தபடி காணப்படுகிறது. மேலும் குப்பைத் தொட்டிகளும் பயனற்றுக் கிடக்கின்றன. இதனை உடனடியாக ஏலம் விட்டால் அரசுக்கு வருவாய் கிடைக்கும் என அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர். பண்ருட்டி நகராட்சிக்கு ஆணையர் இல்லாததால், பல்வேறு பணிகள் முறையாக நடைபெறுவதில்லை என குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதனால் பண்ருட்டி நகராட்சி ஆணையரை நியமனம் செய்யவேண்டும் எனக் கோரிக்கை வைத்துள்ளனர்.
இது குறித்து நகராட்சி நிர்வாகத்திடம் கேட்டபோது, குப்பைகளை சேகரிக்க எட்டு லாரிகள், 23 பேட்டரி வாகனங்கள் தற்போது பயன்பாட்டில் இருப்பதாகவும், 25 ஆண்டுகள் பழமையான வாகனங்கள்தான் வீணாகி இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பழைய வாகனங்களின் ஆவணங்கள் குறித்து ஆய்வுசெய்து வருவதாகவும் தெரிவித்துள்ளனர்.