சீர்காழி ஊராட்சி ஒன்றியத்தில் நடைபெற்று வரும் வளர்ச்சி பணிகளை நேற்று மயிலாடுதுறை மாவட்ட கலெக்டர் லலிதா பார்வையிட்டு ஆய்வு செய்தார். நாங்கூர்-குச்சிபாளையம் கிராமத்தை இணைக்கும் வகையில் மாநில நிதிக்குழு மானிய திட்டத்தின் கீழ் ரூ.42 லட்சம் மதிப்பீட்டில் நடைபெற்று வரும் தார்சாலை பணியை பார்வையிட்டார்.
அதனைத் தொடர்ந்து சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து திருமணிக்கூடம் பகுதியில் கட்டப்பட்டு வரும் பஸ் நிழற்குடை பணிகளை உடனே முடிக்க உத்தரவிட்டார். மேலும் மகாத்மா காந்தி வேலை உறுதியளிப்பு திட்டத்தின் கீழ் ரூ.20 லட்சம் மதிப்பீட்டில் வாய்க்கால் புனரமைப்பு பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
இதனைத் தொடர்ந்து காரைமேடு ஊராட்சியில் ரூ.50 லட்சம் மதிப்பீட்டில் தமிழ்நாடு ஊரக உட்கட்டமைப்பு திட்டத்தின் கீழ் அமைக்கப்பட்டு வரும் தார் சாலை பணியையும், புங்கனூர் ஊராட்சியில் வளர்ச்சி பணிகளையும் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
ஆய்வின் போது ஒன்றிய ஆணையர் அருள்மொழி, வட்டார வளர்ச்சி அலுவலர் (ஊராட்சிகள்) கஜேந்திரன், ஊராட்சி மன்ற தலைவர்கள் அகோரம், சுகந்தி நடராஜன், ஒன்றிய பொறியாளர்கள் கலையரசன், சிவகுமார், பணி மேற்பார்வையாளர் சந்திரசேகரன், ஒசை நாயகி ஆகியோர் உடனிருந்தனர்.