நேரடி நெல் கொள்முதல் நிலையம் திறக்கப்படாததை கண்டித்து குத்தாலம் அருகே அசிக்காட்டில் வீதியில் நெல்லை கொட்டி விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் தாலுகா, அசிக்காடு, செங்குடி, முருகன் தோட்டம் உள்ளிட்ட கிராமங்களில் சுமார் ஆயிரம் ஏக்கருக்கு மேல் நெல் சாகுபடி செய்யப்படுகிறது. இந்த பகுதியில் விளைவிக்கப்படும் நெல்லை ஆண்டுதோறும் அசிக்காட்டில் திறக்கப்படும் அரசின் நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் விவசாயிகள் விற்பனை செய்து வந்தனர்.
ஆனால் இந்த ஆண்டு அறுவடை பணிகள் நடைபெற்று வரும் நிலையில் விவசாயிகள் கோரிக்கை விடுத்தும் இதுவரை அரசின் நேரடி கொள்முதல் நிலையம் அசிக்காட்டில் திறக்கப்படவில்லை. இந்தநிலையில் விவசாயிகள், கடந்த 20 நாட்களுக்கு மேல் தாங்கள் அறுவடை செய்த நெல் மூட்டைகளை கடந்த ஆண்டு நேரடி நெல் கொள்முதல் நிலையம் இயங்கிய இடத்தில் அடுக்கி வைத்து காத்திருக்கின்றனர்.தெருவில் நெல்லை கொட்டி போராட்டம்அவ்வப்போது மழை பெய்து வரும் நிலையில் வாடகைக்கு தார்ப்பாய்கள் எடுத்து மூடி நெல்லை விவசாயிகள் பாதுகாத்து வருகின்றனர். 20 நாட்களுக்கு மேலாகியும் தங்களது கோரிக்கைக்கு தீர்வு கிடைக்காததால் ஆத்திரமடைந்த விவசாயிகள், நெல்லை அசிக்காடு கடைத்தெரு வீதியில் கொட்டி கோஷங்கள் எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டனர்.