கடலூர் மாவட்டத்தில் 1,248 கிலோ மக்காளச்சோள விதைகளை விற்பனை செய்ய தடை விதித்து பறக்கும் படை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
கடலூர் மாவட்டத்தில் தொழுதூர், வேப்பூர் மற்றும் அதை சுற்றியுள்ள விதை விற்பனை நிலையங்களில் கோவை விதைச்சான்று மற்றும் அங்ககச்சான்று துறை இயக்குனர் உத்தரவின்படி, விழுப்புரம் மாவட்ட விதை ஆய்வு துணை இயக்குனர் (பொறுப்பு) சோமு தலைமையில் விதை ஆய்வாளர்கள் சவுந்தரராஜன், தமிழ்வேல், செந்தில்குமார் மற்றும் அர்வின்ராஜ் ஆகியோர் அடங்கிய பறக்கும் படை அதிகாரிகள் ஆய்வு செய்வதற்காக வந்தனர்.
தொடர்ந்து அவர்கள் தொழுதூர் மற்றும் அதை சுற்றியுள்ள விதை விற்பனை நிலையங்களை ஆய்வு செய்தனர். அப்போது அங்கு இருப்பு வைக்கப்பட்டுள்ள விதைகளை பரிசோதித்து, தரமான விதைகள் தான் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளதா? என்றும், உரிய அங்கீகாரம் பெற்றுதான் விதைகள் விற்பனை செய்யப்படுகிறதா?என்றும் ஆய்வு செய்தனர்.
மேலும், உரிய அங்கீகாரம் பெறாமல் விதை விற்பனை நிலையங்கள் இயங்கினாலோ அல்லது தரமற்ற விதை களை விற்பனை செய்தாலோ?ஆய்வின் போது கண்டறியப்பட்டால், அந்த விதை விற்பனை நிலையங்களுக்கு விற்பனை தடை விதிப்பதோடு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்படும் என்று எச்சரிக்கை விடுத்தனர்.
இது தவிர விதை விற்பனை பதிவேடு, விதை உரிமம், விற்பனை ரசீது, விதை சேமிப்பு முறைகள், காலாவதியான விதைகள் ஏதும் விற்பனை செய்யப்படுகிறதா?என்பது குறித்தும் ஆய்வு மேற்கொண்டனர்.
இந்த ஆய்வு குறித்து விதை ஆய்வு துணை இயக்குனர் சோமு கூறியதாவது:-
விருத்தாசலம், தொழுதூர், வேப்பூர் மற்றும் திட்டக்குடி ஆகிய பகுதிகளில் அரசு உரிமம் பெற்று 266 விதை விற் பனை நிலையங்கள் செயல்படுகின்றன. இங்கு இருப்பு வைத்து விற்பனை செய்யப்படும் விதைகள் தரமான விதைகள் தானா? என்றும், உரிய சட்டத்திட்டங்களுக்குட்பட்டு விதைகள் விற்பனை செய்யப்பட்டு வருகிறதா? என்றும் ஆய்வு செய்தோம்.
விவசாயிகளுக்கு விதை விற்பனை செய்யும் போது உரிய விற்பனை ரசீது வழங்க வேண்டும், விற்பனை செய்யப் படும் விதைகளுக்கு உரிய கொள்முதல் பட்டியல், பதிவு சான்று எண், முளைப்பு திறன் அறிக்கை ஆகியவற்றை பராமரிக்க வேண்டும் என்று விதை விற்பனையாளர்களுக்கு அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.
மேலும், இப்பகுதியில் உள்ள விற்பனை நிலையங்களில் மக்காச்சோளம் மற்றும் பருத்தி பயிர்களில் 308 விதை மாதிரிகள் எடுக்கப்பட்டு, கடலூரில் உள்ள விதை பரிசோதனை ஆய்வகத்திற்கு பரிசோதனைக்காக அனுப்பப்பட்டுள்ளது.
ஆய்வின் போது சில விதை விற்பனை நிலையங்களில் விதைப்பரிசோதனை முடிவுகள் மற்றும் வெளி மாநில விதைகளுக்கான படிவம் ஆகியவை இன்றி விவசாயிகளுக்கு விற்பனை செய்ய வைத்திருந்த ரூ.5 லட்சத்து 51 ஆயிரம் மதிப்புள்ள 1,248 கிலோ மக்காச்சோள விதைகளை விற்பனை செய்ய தற்காலிக தடை விதிக்கப்பட் டுள்ளது. இவ்வாறு துணை இயக்குனர் சோமு கூறினார்.